லைஃப்ஸ்டைல்
விட்டுக்கொடுத்த காதல் கெட்டுப்போவதில்லை

விட்டுக்கொடுத்த காதல் கெட்டுப்போவதில்லை

Published On 2020-01-21 06:36 GMT   |   Update On 2020-01-21 06:36 GMT
உண்மையான காதல் என்பது ஒருவருக்காக இன்னொருவர் விட்டுக்கொடுத்து அன்பை நிலைநாட்டுவதில்தான் இருக்கிறது. ஒருதலைக்காதலர்களுக்கும் இது பொருந்தும். அடுத்தவர்களின் இதயத்தையும் புரிந்துகொண்டு அன்போடு வாழ அனைவரும் முன்வரவேண்டும்.
காதல் எப்போதும் எல்லோரிடமும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. காதல் இல்லாமல் இந்த உலகம் இல்லை. அது இயற்கையானது, இன்பமயமானது. ஆனால் அதுவே ஒருதலைக் காதலாகிவிடும்போது அடுத்தவர்களுக்கு கஷ்டத்தைதந்து துன்பமயமானதாக்கிவிடுகிறது. அது சமூகத்தில் தேவையற்ற விபரீதங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்துகிறது.

காதலில் அன்புதான் மிகுந்திருக்கும். அது இருவழிப்பாதை போன்றது. ஆனால் ஒருதலைக்காதலில் ஒருவித கட்டாயமும், ஒரு வகையான வற்புறுத்தலும் உருவாகிவிடுகிறது. தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்பித்தான் ஆகவேண்டும் என்ற நோக்கம் அதில் இருக்கிறது. ஒருதலைக்காதலில் ஒருவர், மற்றவரை தன் வசப்படுத்த பல்வேறுவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம்.

காதல்வசப்படுதல் என்பது இப்போது இயல்பாக நடக்கிறது. ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரின் காதலை நிராகரிக்கவும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருதலைக்காதலர்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பதால், அதில் வன்முறை கலந்து அவர்களது வாழ்க்கையையே திசைமாற்றிக் கொண்டு சென்றுவிடுகிறது.

பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலைக் காதல் தோல்வியிலும் ஏற்படும். இது ஒருவருக்கு வேதனையாகவும், மற்றவருக்கு தொந்தரவாகவும் அமையும். சமூகம் ஒருதலைக்காதலர்களை கோபத்தோடு பார்க்கிறது. அந்த ஒருதலைக்காதலர் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.

ஒருதலைக்காதலில் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருக்கிறார்கள். பாதிப்பைகொடுப்பவர் களாக ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்த பாதிப்பு தனிப்பட்ட ஆண்கள், பெண்கள் என்பதையும் தாண்டி சமூகத்திலும் பெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த காதலர்களைகொண்ட குடும்பங்களும் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகுகிறது.

ஒருதலைக்காதலை பொறுத்தவரை, ‘நடந்தால் நடக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்’ என்று மேம்போக்காக காதலிப்பவர்களும் உண்டு. தன்னை திரும்பிப் பார்த்து தன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்னொருவர் மீது காதலை திணிப்பவர்களும் உண்டு. தான் விரும்புகிறவர் தன்னை காதலிக்க எந்த முகாந்திரமும் இல்லாத போதும் எப்படியாவது தன் காதல் ஜெயித்து விடாதா என்ற தவிப்புடன் காதலிப்பவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும் ஒருதலைக்காதல் அன்பு நிறைந்ததல்ல! வம்பு நிறைந்தது!

காதல் என்றாலே அங்கு அன்புதான் மிகுந்திருக்கவேண்டும், வம்பு இருக்கக்கூடாது. ஒருதலைக்காதலிலும் அன்புதான் இருக்கவேண்டும். ஒருதலைக்காதல், ஒரிஜினல் காதலாகாவிட்டால், அதில் இருந்து அமைதியாக பின்வாங்கிவிடுவது நல்லது. அப்படி முடியாத பட்சத்தில் அடுத்தவருக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அமைதியாக இருப்பது காதலுக்கு தரும் மரியாதையாக இருக்கும்.

புகழ் பெற்ற ஒரு ஆங்கில நாவல், ஒருதலை காதலின் தியாகத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளாத நாயகி, தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொள்வாள். அப்போது கதாநாயகன் ‘என் உண்மை காதலை உணர்ந்து என்றாவது ஒரு நாள் நீ கண்ணீர்விடுவாய். அப்போது தான் என் தூய்மையான காதல் உனக்குப் புரியும்’ என்று கூறுவான். கடைசியில் நாயகியின் கணவனை தூக்கிலிருந்து காப்பாற்றிவிட்டு அவனுக்கு பதில் இவன் தூக்கு மேடையேறிவிடுவான். இறுதியில் அந்த ஒருதலைக்காதலனின் கல்லறையில் நாயகி கண்ணீர் விடுவாள். ‘உன் ஒருதலை காதலுக்கு நான் தரும் அஞ்சலி இந்த கண்ணீர் துளிகள்’ என்று கூறுவதாக கதை முடியும். அது மிக உருக்கமான கதை. காதலிக்க விரும்பும் ஒவ்வொருவரும் முதலில் இதுபோன்ற கதைகளை படித்துவிட்டுதான் காதலில் இறங்கவேண்டும்.

அந்த அற்புதமான கதையை போன்று, ஒருதலைக்காதலை தியாகத்தில் முடிக்கும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்? இதை ஒருவிதத்தில் பக்குவமாக எடுத்துக்கொண்டாலும், இன்னொரு கோணத்தில் பார்த்தால் ‘இந்த ஒருதலைக்காதலிக்காக அவர் தூக்கு கயிற்றில் ஏறி இருக்கவேண்டுமா?’ என்ற கேள்வியும் எழும்.

காதல் என்றாலே அது திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது. ஆனால் ஒரு தலைக்காதல் மேற்கூறியவைகளுக்கு நேர் எதிராக மாறுகின்றன. தெய்வீகத்திற்கு பதில் வெறியையும், மென்மைக்கு பதில் முரட்டுதனத்தையும் அது சிலரிடம் உருவாக்கிவிடுகிறது.

காதலிப்பவர்கள் முதலில் தங்கள் இதயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் தங்களால் காதலிக்கப்படுகிறவர் களின் இதய உணர்வுகளை உள்வாங்கமுடியும். தான் காதலிக்கும் நபர் தன்னை திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம், ஏமாற்றம், வேதனை, ஒரு பொறுமையற்ற நிலையை மனதில் ஏற்படுத்தி அவர்களை மனநோயாளிபோல் மாற்றிவிடும் கொடுமையும் இன்றைய காலகட்டத்தில் நடந்துகொண்டிருக்கிறது. தான் காதலித்த பெண்ணுக்கு நடந்து விட்ட திருமணத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அவள் தனியாக இருக்கும் நேரத்தில் வம்பு செய்யும் சோகமும் நிகழத்தான் செய்கிறது. இது சமூகத்தை பெருமளவில் பாதிக்கிறது.

காதல் என்பது உலகையே வாழ வைக்கும் ஒரு உன்னதம். அது இப்படி பழி பாவத்தில் போய் முடிய இந்த ஒருதலைக் காதல் காரணமாகக் கூடாது. காதலர் தினம் கொண்டாடும் யுகத்தில் உண்மையான காதல் என்பது என்ன என்பதையும் விளக்கிச் சொல்லி இளைய தலைமுறையை வழி நடத்த வேண்டியுள்ளது.

இந்த உலகத்தில் மனிதர்கள் அனுபவிக்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. ஒருதலைக்காதல் என்ற சிறிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் இந்த பெரிய உலகத்தில் இருக்கும் மற்ற அனைத்தையும் மறந்து விடுகிறார்கள். தான் செய்யத் துணியும் காரியத்தின் எதிர் விளைவுகளைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருப்பதில்லை. எப்படியாவது போராடி காதலில் வென்றுவிட வேண்டும் அல்லது கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். வேதனையின் விளிம்பிற்கு சென்று தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டவும் செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறவர்கள் இந்த மனிதப்பிறவியின் மகத்துவம் புரியாதவர்கள். இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருதலைக்காதலின் சோகத்தை புரிந்துகொண்டு அதிலிருந்து விடுபடவேண்டும். சமூகத்தில் அனைவரும் மகிழ்ச்சி யுடன் வாழ வழிவிடவேண்டும்.

உண்மையான காதல் என்பது ஒருவருக்காக இன்னொருவர் விட்டுக்கொடுத்து அன்பை நிலைநாட்டுவதில்தான் இருக்கிறது. ஒருதலைக்காதலர்களுக்கும் இது பொருந்தும். அடுத்தவர்களின் இதயத்தையும் புரிந்துகொண்டு அன்போடு வாழ அனைவரும் முன்வரவேண்டும்.
Tags:    

Similar News