செய்திகள்
நடிகை ராகிணி

நடிகை ராகிணியின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

Published On 2021-01-13 01:58 GMT   |   Update On 2021-01-13 01:58 GMT
போதைப்பொருள் விவகாரத்தில் பரப்பன அக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வரும் ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பெங்களூரு 

கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர். இவர்கள், பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடா்பில் இருந்ததுடன், போதைப்பொருட்கள் பயன்படுத்தியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக நடிகைகள் ராகிணி, சஞ்சனா மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் நடிகை ராகிணி பரப்பன அக்ரஹாராவில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். கர்நாடக ஐகோர்ட்டில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் அவர், ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த மனு மீதான விசாரணை கடந்த 8-ந் தேதி நடந்த போது, 12-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடிகை ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது.

பின்னர் ராகிணியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஜாமீன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ள நடிகை ராகிணி சங்கராந்தியை சிறையிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News