செய்திகள்
சாமியார் நரேந்திர கிரி

சாமியார் நரேந்திர கிரி மர்ம மரணம்- சி.பி.ஐ. விசாரணை கேட்டு அலகாபாத் கோர்ட்டில் வழக்கு

Published On 2021-09-21 07:00 GMT   |   Update On 2021-09-21 07:00 GMT
சாமியார் நரேந்திர கிரியின் மரணம் தொடர்பாக அவரது சீடர்கள் ஆனந்தகிரி, சந்தீப் திவாரி, அதயா திவாரி ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அலகாபாத்:

இந்தியாவில் துறவிகளின் மிகப்பெரிய அமைப்பாக அகில பாரதிய அகடா பரி‌ஷத் திகழ்கிறது. இந்த அமைப்பின் தலைவராக மஹந்த் நரேந்திரகிரி இருந்தார்.

புகழ்பெற்ற சாமியாரான நரேந்திரகிரி உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள பாகம்பரி மடத்தில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் நரேந்திர கிரி சடலமாக மீட்கப்பட்டார். மர்மமான முறையில் அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாநில போலீஸ் ஐ.ஜி.கே.பி.சிங் கூறியதாவது:-

நரேந்திரகிரி தூக்கிட்டு கொண்டதாக மடத்தில் இருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றினர். அவர் உயிரிழப்பதற்கு முன்பாக எழுதியிருந்த கடிதத்தில், தான் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

முதல்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் உடல்கூறாய்வு மற்றும் தடயவியல் பரிசோதனைக்கு பின்னர்தான் அவர் எவ்வாறு இறந்தார் என்பது உறுதிப்படுத்தப்படும்.

நரேந்திரகிரியின் மர்ம மரணம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதற்கிடையே நரேந்திர கிரியின் மரணம் தொடர்பாக அவரது சீடர்கள் ஆனந்தகிரி, சந்தீப் திவாரி, அதயா திவாரி ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் நரேந்திரிகிரிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஆனந்தகிரி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, மடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில்தான் நரேந்திரகிரி மர்மமான முறையில் இறந்துள்ளார்.

மற்ற 2 பேரும் நரேந்திர கிரியுடன் தங்கி இருந்தவர்கள் ஆவார்கள். 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புகழ் பெற்ற சாமியார் நரேந்திரகிரிகியின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு அலகாபாத் ஐகோட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சுனில் சவுத்ரி என்ற வக்கீல் தாக்கல் செய்துள்ள மனுவில் நரேந்திர கிரியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. இதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.



நரேந்திரகிரியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மாலை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர் மரணத்துக்கான காரணம் தெரியவரும்.

நரேந்திரகிரியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆன்மிக மரபுகளுக்கு அவர் தன்னை அர்ப்பணித்து இருந்தார். அவரது மறைவு வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்று மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


இதையும் படியுங்கள்...திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் பெற குவிந்த பக்தர்கள்

Tags:    

Similar News