ஆன்மிகம்
சதுரகிரிக்கு செல்ல வந்திருந்த பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு திரண்டு நின்றிருந்த காட்சி.

சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Published On 2020-09-02 07:27 GMT   |   Update On 2020-09-02 07:27 GMT
பவுர்ணமியையொட்டி சதுரகிரியில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதித்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசையையொட்டி 3 நாள், பவுர்ணமியையொட்டி 3 நாள், பிரதோஷம் நாளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு நேற்று முதல் நிபந்தனைகளுடன் கோவிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கியது.

இந்தநிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நேற்றும், இன்று (புதன்கிழமை) ஆவணி பவுர்ணமியையொட்டி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்தனர்.

தற்போது தமிழக அரசு அந்தந்த மாவட்டங்களில் மட்டும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதித்த நிலையில், வெளிமாவட்ட பக்தர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்திருந்தனர். இதனை அடுத்து கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கோவில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதித்தனர்.

உடல் வெப்ப பரிசோதனை, முககவசம், கிருமி நாசினி உள்ளிட்ட ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News