செய்திகள்
தென்கொரியாவில் மிடாக் புயல் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி

தென்கொரியாவை தாக்கியது மிடாக் புயல் - 6 பேர் பலி

Published On 2019-10-03 07:39 GMT   |   Update On 2019-10-03 07:39 GMT
தென்கொரியாவில் மிடாக் புயல் தாக்கியதைத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சியோல்:

தென்கொரியாவில் மிடாக் புயல் தாக்கியது. இதன் காரணமாக நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. கடும் சேதம் விளைவித்துள்ள இந்த புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள புசான் நகரில் மழை வெள்ளம் காரணமாக பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மேலும் அப்பகுதியில் வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் 4 பேர் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாட்டின் கிழக்கு பிராந்திய பகுதிகளில் இது வரை 500 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நிலச்சரிவு காரணமாக நாட்டின் கிழக்குப் பகுதியில் ஒரு சுற்றுலா ரெயில் தடம் புரண்டது. மழையால் அப்பகுதியில் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. நாட்டின் தெற்கு பகுதியில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஐந்து வீடுகள் முற்றிலும் சிதைந்தன. மேலும், தென் கொரியாவின் 1,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மிடாக் புயல் காரணமாக இதுவரை 6 பேர் உயரிழந்துள்ளதாகவும் மேலும் 6 பேரை காணவில்லை எனவும் சில உள்ளூர் பத்திரிக்கைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News