ஆன்மிகம்
குரு பகவான் மற்றும் சக்கரத்தாழ்வார் பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்த படம்.

சோழவந்தான் அருகே குருவித்துறை கோவிலில் குருப்பெயர்ச்சி விழா

Published On 2020-11-16 09:11 GMT   |   Update On 2020-11-16 09:11 GMT
சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா நேற்று இரவு நடந்தது. பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர்.
சோழவந்தான் அருகே வைகை ஆறு கரை அருகே குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நவக்கிரகங்களில் ஒருவரான சக்திவாய்ந்த குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் கோடி புண்ணியம் வழங்கும் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதை சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார். ஒவ்வொரு குருபெயர்ச்சி தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.

இதேபோல் இதுவரை தனுசு ராசியில் இருந்து வந்த குருபகவான் நேற்று இரவு 9.48 மணி அளவில் மகர ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா 3 நாள் நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.

நேற்று இரவு 7.38 அளவில் பரிகார மகாயாக பூஜை நடந்தது. நேற்று இரவு 9.48 மணி அளவில் அர்ச்சகர்கள் புனித நீர்க் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர் குருபகவான் சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரம் செய்து பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தது. பின்னர் பூஜை நடைபெற்றது. குருப்பெயர்ச்சி விழாவில் தேனி எம்.பி. ரவீந்திரநாத், எம்.எல்.ஏ.க்கள் சோழவந்தான் மாணிக்கம், மதுரை சரவணன், தி.மு.க. எம்.எல்.ஏ. மூர்த்தி, அழகர்கோவில் துணை ஆணையர் ஆனந்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன் மாறன், ரேகா வீரபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மன்னாடிமங்கலம் பவுன்முருகன், குருவித்துறை ரம்யா நம்பிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குருவித்துறை கோவிலுக்கு வந்திருந்தனர். வந்திருந்த பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் குருபகவானை தரிசித்தனர். கொரோனோ தொற்று காரணமாக ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ்பாண்டியன் தலைமையில் மருத்துவ குழு, வாடிப்பட்டி தாசில்தார் பழனிகுமார் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையதுறையினர் ஆகியோர் 5 இடங்களில் தடுப்பு வேலி ஏற்படுத்தி சமூக இடைவெளியுடன் வரிசை, வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.

சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ், சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீசார், சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெண்மணி. செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன், ஆலய பணியாளர்கள் செய்திருந்தனர். குருவித்துறை ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா நம்பிராஜன் தலைமையில் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

டி.கல்லுப்பட்டி அருகே கொட்டாணிபட்டியில் உள்ள வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. அது சமயம் கோவிலில் கும்ப பூஜை, கலச பூஜை, கோமாதா பூஜை மற்றும் 18 வகையான அபிஷேகங்கள், யாகங்கள், நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து கோவிலில் ஜோதிடர் அறிவழகன் குரு பெயர்ச்சி பற்றியும், அது குறித்த பலன்கள் குறித்தும் ஆன்மிக சொற்பொழிவாற்றினார். விழாவில் பக்தர்கள் முககவசத்துடன் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News