செய்திகள்
மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் விடிய, விடிய தர்ணாவில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

வனக்கல்லூரி மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் - மேட்டுப்பாளையத்தில் 2-வது நாளாக நீடிப்பு

Published On 2021-09-09 09:01 GMT   |   Update On 2021-09-09 09:01 GMT
வனக்கல்லூரியில் இன்று 2-வது நாளாக மாணவ, மாணவிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை:

கோவை மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள பட்டுப்புழுவியல் துறையில் இளநிலை, முதுநிலை, முனைவர் படிப்பு என மொத்தம் 80 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பட்டுப்புழுவியல் துறைக்கான சேர்க்கை மட்டும் நடைபெறவில்லை. இதனால் பட்டுப்புழுவியல் துறை மாணவ, மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற அச்சம் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

எனவே இந்தே ஆண்டும் பட்டுப்புழுவியல் துறையில் மாணவர்களை சேர்க்க வேண்டும். பட்டுப்புழுவியல் துறையை கல்லூரியாக மாற்றப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி வனக்கல்லூரி பட்டுப்புழுவியல் துறை மாணவ, மாணவிகள் நேற்று காலை 10 மணியளவில் துறை அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், கருப்பு பட்டை அணிந்திருந்தனர்.

வனக்கல்லூரி முதல்வர் பார்த்திபன் மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகிகள் மாணவர் பிரதிநிதிகளுடன் காலை முதல் இரவு வரை பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது.

மேலும் இந்த கல்வி ஆண்டில் பட்டுப்புழுவியல் துறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்து, தங்களது போராட்டத்தை கைவிட மறுத்து விடிய, விடிய தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 2-வது நாளாக மாணவ, மாணவிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டுபுழுவியல் துறை கட்டிடம் அருகே ஓடந்துறை காப்புக்காடு பகுதி, கோத்தகிரி சாலைகள் காட்டு யானைகள் அதிகளவில் நடமாடும் பகுதியாகும். ஆனால் எந்தவித பயமும் இல்லாமல் தங்களது குறிக்கோளில் உறுதியாக இருந்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தில் கல்லூரியில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. 

Tags:    

Similar News