செய்திகள்
எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published On 2021-06-28 04:20 GMT   |   Update On 2021-06-28 04:20 GMT
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள், தமிழகத்தில் புகுந்து ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களில் 9 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னை:

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வங்கி ஏ.டி.எம். மையங்களை குறி வைத்து கடந்த 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நூதன கொள்ளை சம்பவங்கள் நடந்தன. 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் ரூ.1 கோடிக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் செலுத்தும் எந்திரங்களின் வாயிலாக நூதன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இந்த கொள்ளை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 15 ஏ.டி.எம். மையங்களில் ரூ.50 லட்சம் கொள்ளை போனது.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 10 கொள்ளையர்கள், தமிழகத்தில் புகுந்து ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களில் 9 பேர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள்தான் தமிழகம் வந்து சென்னை உள்பட பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் கைவரிசை காட்டியவர்கள்.

இன்னொருவர் கொள்ளை கும்பல் தலைவன் சதக்கத்துல்லாகான். இவர்களை பிடிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. துணை கமிஷனர்கள் ஹரிகரபிரசாத், கார்த்திகேயன் அடங்கிய தனிப்படை போலீசார் அரியானா மாநிலத்துக்கு சென்றனர்.

முதலில் கொள்ளையன் அமீர் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் அரியானா மாநிலம் பல்லப்கர் என்ற இடத்தைச் சேர்ந்தவர். மலை அடிவாரத்தில் உள்ள அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குலத்தொழில் போல இது போன்ற நூதன கொள்ளை தொழிலை செய்து வந்தனர். ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளையில் ஈடுபடுவது எப்படி? என்று முன்னாள் வங்கி ஊழியர்கள் மூலம் பயிற்சி பெற்றவர்கள். பயிற்சி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு குழுக்களாக பிரிந்து சென்று கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையன் அமீர், விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அமீரின் கூட்டாளி வீரேந்தர் ராவத் (23) என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நேற்று சென்னை அழைத்து வந்தனர். அவரும் அரியானா மாநிலம் பல்லப்கர் கிராமத்தைச் சேர்ந்தவர்தான்.

அவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கொள்ளை சம்பவத்தை எப்படி அரங்கேற்றினார்கள்? என்பது பற்றி விசாரணை நடந்தது. விசாரணை முடிந்தவுடன் கொள்ளையன் வீரேந்திர்ராவத் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொள்ளையர்கள் 9 பேரும் தனித்தனி குழுக்களாக பிரிந்து, சென்னையில் 15 இடங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்கள், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தில் கைவரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. அனைவரும் பிடிபட்டால் தான் இது பற்றிய முழு விவரமும் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

அரியானா மாநில ஏ.டி.எம். கொள்ளையர்களின் தலைவன் சதக்கத்துல்லாகான் தப்பி ஓடிவிட்டார். அவர் உள்பட மேலும் 8 கொள்ளையர்களை கூண்டோடு கைது செய்ய தனிப்படை போலீசார் தொடர்ந்து அரியானாவில் முகாமிட்டு இருந்தனர்.

இந்தநிலையில், எஸ்பிஐ ஏடிஎம் டெபாசிட் எந்திரத்தில் நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



அரியானா மாநிலத்தில் ஏற்கனவே 2 பேர் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  மூன்றாவது கொள்ளையனை அரியானா போலீஸ் உதவியுடன் தமிழ்நாடு போலீஸ் பிடித்தது.   அவரை சென்னை கொண்டு வரும் முயற்சியில் தமிழ்நாடு போலீசார் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

Similar News