செய்திகள்
மு.க.ஸ்டாலின்

பண்டிகைகளை வீடுகளிலேயே கொண்டாடுங்கள் -தமிழக முதல்வர் வேண்டுகோள்

Published On 2021-09-09 16:29 GMT   |   Update On 2021-09-09 16:29 GMT
தமிழ்நாட்டில் நிபா வைரஸ் நோயின் தாக்கம் ஏற்படாதவாறு கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை சற்று உயர்ந்து காணப்படுகிறது. மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் நிபா வைரஸ் நோயின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் நிபா வைரஸ் நோயின் தாக்கம் ஏற்படாதவாறு மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரளாவில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அம்மாநிலத்துடனான பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவின் அறிக்கையில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது என்றும், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், தடுப்பூசி போடுவதை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி அதிகப்படியான மக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை அக்டோபர் 31ம் தேதி வரை தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவும், மூன்றாம் அலை ஏற்படுவதை தடுக்கும்வகையிலும், பொதுமக்கள் பண்டிகைகளை தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும். பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை மக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தலைவர்கள் சிலைகளின் மாலை அணிவிக்கும் நிகழ்வில் ஆட்சியர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும். தலைவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள், அரசியல் கட்சியினருக்கு தலா 5 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம்.

தமிழகத்தில் 45% பேருக்கு ஒரு தவணை தடுப்பூசியும், 12% பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாம் அலையை தடுப்பதற்கு தடுப்பூசியின் பங்கு முக்கியமானது. தினமும் சுமார் 3 லட்சம் தடுப்பூசி என்ற அளவை தற்போது 5 லட்சம் என அதிகரித்துள்ளோம்.

Tags:    

Similar News