உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

கூடுதல் கடன் வழங்கி ஆடை உற்பத்திக்கு வங்கிகள் கைகொடுக்க வேண்டும்- பின்னலாடை துறையினர் வலியுறுத்தல்

Published On 2022-04-15 06:24 GMT   |   Update On 2022-04-15 06:24 GMT
பின்னலாடை நிறுவனங்களை பொருத்தவரை நூல் உட்பட ஆடை உற்பத்தி மூலப்பொருள் கொள்முதலுக்கு வங்கி கடன்களையே சார்ந்துள்ளன.
திருப்பூர்:

பஞ்சு விலை உயர்வால் ஒசைரி நூல்  விலையும் கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. கடந்த 18 மாதங்களில் கிலோவுக்கு 169 ரூபாய் வரை நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  

இதனால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் நூல் கொள்முதலுக்கான முதலீடு இரட்டிப்பாகியுள்ளது.நிட்டிங், டையிங், பிரின்டிங் என ஆடை தயாரிப்பு சார்ந்த எல்லா வகை ஜாப்ஒர்க் கட்டணங்கள், ஆடைகளில் இணைக்கப்படும் துணை பொருட்கள் விலைகளும் அதிகரித்துள்ளன.

பின்னலாடை நிறுவனங்களை பொருத்தவரை நூல் உட்பட ஆடை உற்பத்தி மூலப்பொருள் கொள்முதலுக்கு வங்கி கடன்களையே சார்ந்துள்ளன. 

நிறுவனங்களின் ஆண்டு வர்த்தகம், நிதி நிலைகளுக்கு ஏற்ப வங்கிகள் கடன் நிர்ணயம் செய்து வழங்குகின்றன.

உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளதால் வங்கிகள் நிர்ணயித்துள்ள கடன் வரம்பு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு போதுமானதாக இல்லை. கூடுதல் கடன் வழங்கி ஆடை உற்பத்திக்கு வங்கிகள் கைகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரிகிரீஷ் கூறியதாவது:-

தாறுமாறாக உயர்ந்துள்ள நூல் விலையால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பரிதவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரை, ஒரு கோடி ரூபாயில் எவ்வளவு நூல் வாங்க முடிந்ததோ, அதில் பாதியளவு நூலையே தற்போது வாங்க முடிகிறது. 

நூலுக்காக இரு மடங்கு தொகையை செலவிட்டால் மட்டுமே கடந்த ஆண்டு எட்டிய அதே அளவு ஆடை வர்த்தகத்தை இந்தாண்டும் எட்டமுடியும். இதனால் திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களின் ஆடை வர்த்தகம் பாதியாக குறையும் அபாயம் உள்ளது. 

நூல் கொள்முதலுக்கு உடனடியாக தொகை செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. குறு, சிறு, நடுத்தர ஆடை உற்பத்தியாளர்கள், நிதி பற்றாக்குறையால், போதுமான அளவு நூல் வாங்க முடியாமல், நாடிவரும் வர்த்தக வாய்ப்புகளையும் இழக்கின்றனர். 

ஏற்கனவே நிர்ணயித்துள்ள வரம்பு அடிப்படையில் வங்கிகள் கடன் வழங்கினால் பின்னலாடை நிறுவனங்களுக்கு போதுமானதாக இருக்காது.


தற்போதைய சூழல்களை கருத்தில் கொண்டு, வங்கிகள், ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கான கடன் வரம்பை உயர்த்த வேண்டும். நிறுவனங்கள் கைவசம் உள்ள ஆடை தயாரிப்பு ஆர்டர் அடிப்படையில், கூடுதல் கடன் தொகை வழங்கவேண்டும். மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு ஏற்ப  வர்த்தகர்களிடம் ஆடைகளுக்கு கூடுதல் தொகை பெற பின்னலாடை துறையினர் தொடர்ந்து முயற்சித்துவருகின்றனர். 

வங்கிகள் கைகொடுத்தால், மூலப்பொருள் கொள்முதலுக்கான நிறுவனங்களின் நிதி தேவை பூர்த்தியாகும். ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

புதிய வாய்ப்புகளை வசப்படுத்தினால் பின்னலாடை நிறுவனங்களின் ஆண்டு வர்த்தகம் உயரும். இதனால் வங்கிகளும் வளர்ச்சி பெறும். 

இவ்வாறு  அவர் கூறினார்.
Tags:    

Similar News