செய்திகள்
முருங்கைக்காய்

வெங்காயத்தை தொடர்ந்து கத்தரி, முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்வு

Published On 2019-11-11 10:33 GMT   |   Update On 2019-11-11 10:33 GMT
வெங்காய விலை உயர்வை தொடர்ந்து கத்தரிக்காய், முருங்கைக்காயின் விலையும் கடுமையாக உயர்ந்ததுடன் ஏழைகள் வாங்கி உண்ண முடியாத உச்சத்தில் உள்ளது.
ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு தினந்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக வெங்காயம் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கடும் மழை பெய்ததால் வரத்து குறைந்தது. அதே சமயம் உள்ளூரிலும் விளைச்சல் குறைந்ததால் சின்ன வெங்காயம் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், பல்லாரி வெங்காயம் ரூ.60-க்கும் விற்பனையானது.

வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதால் வெங்காயத்தை சாமானிய மக்கள் வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மார்க்கெட்டை தவிர உள்ளூர் கடைகள் சிலவற்றில் சின்ன வெங்காயத்தை கண்ணால் பார்ப்பது கூட அரிதாகி போய் உள்ளது.

வெங்காயத்தை தொடர்ந்து தற்போது கத்தரிக்காய் விலையும் அதிகரித்துள்ளது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.120-க்கு விற்கப்பட்டது.

சிக்கன் இறைச்சியை காட்டிலும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதால் சாமானிய மக்களை கவலையடைய வைத்துள்ளது. இதே போல் நாட்டு முருங்கை ஒரு கிலோ ரூ.170-க்கு விற்பனையானது. திண்டுக்கல், நத்தம், ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, வேடசந்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு மதுரை, கோவை, சேலம் மற்றும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். சராசரியாக நாள் ஒன்றுக்கு ஒரு டன் முருங்கைக்காய் வந்த நிலையில் தற்போது சீசன் இல்லாததால் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு விற்ற முருங்கை தற்போது ரூ.170 வரை விற்பனையாகிறது. முருங்கை சீசன் இல்லாததால் இந்த விலை ஏற்றம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே வேளையில் பூசணி ஒரு கிலோ ரூ.8, பீட்ரூட் ரூ.15, சுரைக்காய் ரூ.8, பீன்ஸ் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.30, கோழி அவரை ரூ.35, சவ்சவ் ரூ.5 என சில காய்கறிகள் சற்று விலை குறைந்திருப்பது மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது. மல்லி இலை ரூ.70, புதினா ரூ.50, தேங்காய் ஒரு கிலோ ரூ.35-ல் இருந்து ரூ.40-க்கும் நார்த்தங்காய் ரூ.60-க்கும் விற்பனையானது.

Tags:    

Similar News