செய்திகள்
சச்சின் தெண்டுல்கர்

சூப்பர் ஓவர் விதிமுறை மாற்றத்துக்கு தெண்டுல்கர் வரவேற்பு

Published On 2019-10-17 04:55 GMT   |   Update On 2019-10-17 04:55 GMT
சூப்பர் ஓவர் விதிமுறை மாற்றத்துக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உலக கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முடிவில் சமநிலை (டை) ஏற்பட்டால், முன்பு போல் பவுண்டரி அடிப்படையில் வெற்றி முடிவு செய்யப்படமாட்டாது என்றும் போட்டியில் முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறை தொடரும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது.

ஐ.சி.சி.யின் முடிவை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘போட்டியில் மோதும் இரு அணிகளுக்கு இடையே வெற்றி வித்தியாசம் கிடைக்காத நிலையில் ஒரு அணி வெற்றி பெறும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என்று முடிவு செய்து இருப்பது முக்கியமானது மட்டுமின்றி முடிவை பெறுவதற்கான நியாயமான வழிமுறையாகவும் நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், ‘இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தாதாவுக்கு (சவுரவ் கங்குலியின் செல்லப்பெயர்) வாழ்த்துகள். நீங்கள் எப்பொழுதும் செய்து இருப்பது போல் இந்திய கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து சேவையாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News