செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்திருக்கும் மக்கள்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் கிராக்கி... 5வது நாளாக அலைமோதும் மக்கள்

Published On 2021-04-30 05:52 GMT   |   Update On 2021-04-30 13:11 GMT
ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை எடுக்கிறார்கள்.

சென்னை:

கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் ‘ரெம்டெசிவிர்’ ஊசி மருந்து தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை இல்லை. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

இதை வாங்குவதற்காக தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் சென்னைக்கு படை எடுக்கிறார்கள்.

முதல் மூன்று நாட்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கவுண்டர் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

அங்கு கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், நேற்று முதல் மருத்துவமனையின் எதிரில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு விற்பனை மையம் மாற்றப்பட்டது.

மருந்து வாங்க தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள். காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் மருந்து விற்கப்படுகிறது. அதன் பிறகும் காத்து நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

டோக்கன் பெற்றவர்களும் புதிதாக வருபவர்களும் இரவில் விடிய விடிய காத்து கிடக்கிறார்கள்.


இரவு மருத்துவக் கல்லூரி கேட்டை மூடிவிடுவதால் அனைவரும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நடைபாதையில் பரிதாபமாக விடிய விடிய தூங்காமல் இருக்கிறார்கள். பலர் ரோட்டோரத்தில் தூங்குகிறார்கள்.

மருத்துவ கல்லூரி வளாகம் விசாலமானது நிறைய மரங்களும் உள்ளன. உள்ளே அனுமதித்தால் கூட ஆண்களும், பெண்களும் நிம்மதியாக இருப்பார்கள்.

இரவில் இயற்கை உபாதையை கழிக்கக் கூட சிரமப்படுகிறார்கள்.

இரவு நேரத்தில் அவர்கள் தங்குவதற்காக கல்லூரி வளாகத்தில் மின் விளக்கு வசதிகள் செய்வதோடு கழிப்பறைகளையும் திறந்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்காலிக கழிப்பறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான செலவுக்காக மருந்து விலையில் அஞ்சோ, பத்தோ சேர்த்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிதாபமாக கூறினார்கள்.

Tags:    

Similar News