தமிழ்நாடு
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து 2-வது நாளாக 25 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

Published On 2021-12-07 03:54 GMT   |   Update On 2021-12-07 03:54 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டூர்:

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 25 ஆயிரத்து 400 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் அதே அளவு நீர்வரத்து அணைக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இதனால் அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரியில் 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு- மேற்கு கால்வாயில் 400 கன அடி தண்ணீரும், 16 கண் பாலம் வழியாக 3000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன.

அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த மாதம் 13-ந்தேதி எட்டியது. இதையடுத்து மறுநாள் (14-ந் தேதி) முதல் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணை நீர்மட்டம் கடந்த 24 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News