செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

Published On 2020-10-20 00:44 GMT   |   Update On 2020-10-20 00:44 GMT
ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி வழங்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி:

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மற்றும் துப்பாக்கி சூடு நடந்ததை தொடர்ந்து, அந்த ஆலையை மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஆலையை மீண்டும் திறக்க இடைக்கால தடை விதித்ததோடு, இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.

அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரியும், ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. ஆனால் அரசு உத்தரவை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் அனைவரும் இந்த மனு மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரிய மனுவுக்கும், பதில் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதி கோரிய மனுவுக்கு தமிழக அரசின் வக்கீல் யோகேஷ் கண்ணா நேற்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் அவர், ‘ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு இடைக்காலமாக அனுமதி கொடுக்க தேவையில்லை. இதுவரை, ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம், ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவை கடந்த காலங்களில் இடைக்கால அனுமதி வழங்கவில்லை.

மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசின் நிபுணர் குழு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. மூடப்பட்டுள்ள ஆலையில் தொழில்நுட்ப ரீதியாக எந்திரங்களால் எவ்வித அபாயமும் இல்லை என்பது அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி ஆலைக்குள் நிர்வாகத்தினரை அனுமதிக்க வேண்டியதில்லை. எனவே, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்காலமாக அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காற்று மாசுபாடு குறித்தும், தற்பொழுது குறைந்துள்ள காற்று மாசு குறித்தும் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News