செய்திகள்
வானதி சீனிவாசன்

வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்- வானதி சீனிவாசன்

Published On 2020-11-13 09:45 GMT   |   Update On 2020-11-13 14:33 GMT
அரசியல் ரீதியாக வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர் விளைவுகளைத்தான் உருவாக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை ஒரு மாதம் வேல் யாத்திரை நடத்த முடிவு செய்தது.

கடந்த 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை அடுத்த மாதம் 6-ந்தேதி திருச்செந்தூரில் முடிவடைவதாகவும் நிறைவு நாள் கூட்டத்தில் பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் ரீதியாக பா.ஜனதாவுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் தொடங்கப்பட்ட இந்த யாத்திரைக்கு கூட்டணி கட்சியான அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

யாத்திரை நடத்த அரசு அனுமதி மறுத்து விட்டது. இருப்பினும் தடையை மீறி யாத்திரை நடக்கிறது. போலீசார் கைது செய்கிறார்கள்.

அந்த வகையில் இதுவரை 13 மாவட்டங்களில் யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து யாத்திரை நடைபெறும் என்று பா.ஜனதா தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் சந்தித்து பேசினார். அடுத்த சிறிது நேரத்தில் வருகிற 16-ந்தேதி முதல் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அறிவித்திருந்த சில தளர்வுகளையும் ரத்து செய்வதாக அறிவித்தது.

இது பா.ஜனதா தரப்பை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்தது. அரசின் தடையை மீறி தீபாவளிக்கு பிறகு யாத்திரையை தொடர்வது பற்றி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்கள்.

இது தொடர்பாக அகில இந்திய பா.ஜனதா மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-

கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அரசியல் கட்சிகளும் கொரோனாவோடு வாழ பழகி கொண்டனர். எல்லா கட்சிகளும் கொரோனா எச்சரிக்கையோடு அரசியலில் ஈடுபட்டுள்ளன.

மக்களின் பிரச்சனைகள், அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் பற்றி பேசுவதற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் உரிமை உள்ளது.

அந்த அடிப்படையில் தான் மத்திய அரசின் திட்டங்களை சாதாரண மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழக பா.ஜனதா வேல் யாத்திரையை நடத்துகிறது.

அதை புரிந்து கொண்டு ஒரு அரசியல் கட்சியின் உரிமையை மதித்து அரசு நடந்து கொள்ள வேண்டும். அதற்கு மாறாக அரசியல் ரீதியாக வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர் விளைவுகளைத்தான் உருவாக்கும்.

கொரோனா பரவலை காரணம் காட்டி இருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. தொற்று குறைந்து வருவதாகவும், கட்டுப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து தான் பெரும்பாலான தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

அதே போல் எல்லா கட்சிகளும் கூட்டங்களை நடத்தும்போது முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்கின்றன. மற்ற கட்சிகள் எல்லாம் அரசியல் செய்யும்போது பா.ஜனதாவுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?

அரசாங்கம் அனுமதித்து முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கொடுத்தால் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை. ஆனால் தேவையற்ற பதட்டத்தை உருவாக்கி திடீர் திடீரென்று கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதால்தான் சமூக இடைவெளியை பின்பற்றுவது முடியாமல் போகிறது.

அரசே இடையூறு செய்து பிரச்சனையை உருவாக்கி விட்டு பழியை எங்கள் மீது போடுவதா?

பீகாரில் மாநில தேர்தலையே நடத்தி முடித்து விட்டார்கள். அப்படி இருக்கும்போது ஒரு அரசியல் கட்சி நடத்தும் யாத்திரையை சுமூகமாக நடத்த அரசால் ஏற்பாடு செய்ய முடியாதா?

போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல்தான் யாத்திரை நடக்கிறது. ஒருவேளை இடையூறு ஏற்படும் என்று கருதினால் அதற்கேற்ப வழிதடங்களை மாற்றுவது, போலீசார் ஒழுங்குப்படுத்துவது ஆகியவை தானே நடைமுறை. அதை ஏன் செய்யவில்லை?

பா.ஜனதா மீது பாரபட்சமாக நடந்துக் கொள்வது அப்பட்டமாக தெரிகிறது. எந்த இடையூறுகளையும் தாண்டி பா.ஜனதா மக்கள் பணிகளையும், அரசியல் பணியையும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News