செய்திகள்
கைது

காங்கயத்தில் ரூ. 16 லட்சம் தேங்காய் பருப்பு கடத்திய 3 பேர் கைது

Published On 2020-01-14 10:15 GMT   |   Update On 2020-01-14 10:15 GMT
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள தேங்காய் பருப்பு மூட்டைகளை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் காங்கயம் அருகே உள்ள காமாட்சி புரத்தில் தேங்காய் பருப்பு விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார்.

இங்கு மேலாளராக வேலை பார்க்கும் தமிழ் செல்வனுக்கு கடந்த 11-ந்தேதி காங்கயத்தில் உள்ள ஒரு லாரி அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. அதில் பேசியவர் கேரளா செல்லும் லாரி இங்கு வந்துள்ளது. கேரளாவுக்கு தேங்காய் பருப்பு லோடு இருக்கிறதா? என லாரி டிரைவர் கேட்கிறார் என்று கேட்டுள்ளனர்.

உடனே தமிழ்செல்வன் கேரளாவுக்கு லோடு உள்ளது. வர சொல்லுங்கள் என கூறி உள்ளார். இதனை தொடர்ந்து ஒரு லாரி வந்தது. அதில் ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 15 ஆயிரத்து 500 கிலோ தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏற்றப்பட்டது.

லாரியில் ஏற்றும் போது அதன் ஆவண நகல்களை தமிழ் செல்வன் கேட்டார். அப்போது ஆவணங்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒர்க்‌ஷாப்பில் இருப்பதாகவும், அதனை எடுத்து வந்து கொடுத்து விட்டு லாரியை எடுத்து செல்வதாகவும் லாரி டிரைவர் கூறினார்.

இரவு 8 மணியளவில் தேங்காய் பருப்பு தொடர்பான பில்களை அலுவலக அறையில் வைத்து விட்டு தமிழ் செல்வன் கழிவறைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது பில் மற்றும் லாரி, அதன் டிரைவர் மற்றும் அவருடன் வந்த 2 பேர் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து காங்கயம் போலீசில் தமிழ்செல்வன் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்திய போது தேங்காய் பருப்புடன் லாரி கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியில் நிற்பது தெரிய வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த அருணகிரிநாதன் (46), திருச்சி மாவட்டம் முசிறி பிரபாகரன்(29) பாலக்காடு ஹைட்ரோஸ் (46) ஆகிய 3 பேரை கைது செய்தனர். தேங்காய் பருப்பு மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News