செய்திகள்
குமாரபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

குமாரபாளையம், திருச்செங்கோட்டில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

Published On 2020-10-13 12:51 GMT   |   Update On 2020-10-13 12:51 GMT
குமாரபாளையம், திருச்செங்கோட்டில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்:

மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டம், புதிய கல்விக் கொள்கை போன்ற பல்வேறு சட்டங்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதன்படி குமாரபாளையத்தில் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 26 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, திருச்செங்கோட்டில் உள்ள அண்ணா சிலை முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கட்சியினர் அப்பகுதியில் திரண்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு போக்குவரத்து பாதித்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டதாக 65 பெண்கள், 33 ஆண்கள் என 98 பேரை கைது செய்த போலீசார் அவர்களை அங்குள்ள மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News