செய்திகள்
அய்யாக்கண்ணு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு வழக்கு

Published On 2020-10-26 06:22 GMT   |   Update On 2020-10-26 06:22 GMT
மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
புதுடெல்லி:

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் 27-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததைத்தொடர்ந்து  சட்டமாக மாறின.

இந்த வேளாண் சட்டங்களுக்கு, காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

இதேபோல் வேளாண் சட்டங்கள் செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் எம்பி பினோய் விஸ்வம், ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி. மனோஜ்குமார் ஜா, வக்கீல் மனோகர் லால் சர்மா, சத்தீஷ்கார் கிசான் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் வைஷ்ணவ் உள்ளிட்டோர்  ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்த மனுக்களை தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து, மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்குடன் சேர்த்து அய்யாக்கண்ணு வழக்கும் விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News