ஆன்மிகம்
விநாயகர்

விநாயகரை வழிபடும் போது மறக்கக்கூடாத மூன்று விஷயங்கள்

Published On 2021-10-27 08:27 GMT   |   Update On 2021-10-27 08:27 GMT
விநாயகரின் நாபியை பிரம்மா என்றும், முகத்தை விஷ்ணுவின் அம்சம் என்றும், கண்களை சிவனின் அம்சம் என்றும், விநாயகரின் இடதுபாகத்தை சக்தியாகவும், வலதுபாகத்தை சூரிய அம்சமாகவும் சொல்வார்கள்.
இந்து சமயத்தில் எத்தனையோ கடவுள்கள் வழிபடப்படுகின்றன. ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டை கையாளுகிறோம். ஆனால் அவை அனைத்துக்கும் பொதுவாகவும் முதன்மையானதாகவும் இருப்பது விநாயகர் வழிபாடுதான். அதனால்தான் விநாயகரைநாம் முழு முதற்கடவுள் என்று அழைக்கிறோம். வேறு எந்த தெய்வத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. எனவே எப்போது இறைவழிபாட்டை தொடங்கினாலும் விநாயகருக்கு முதல் மரியாதையை நாம் அளிக்க வேண்டும்.

“கணபதி பூஜை கைமேல் பலன்” என்று சொல்வார்கள். நாம் எந்த செயலை தொடங்கினாலும் முதலில் விநாயகரை நினைத்துக் கொண்டு அந்த செயலை தொடங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும் என்பது இதன் அர்த்தமாகும். கணபதி என்றிட கலங்கும் வல்வினை என்று சொல்வது இதனால்தான்.
கணபதி என்றால் பக்தர்களின் அஞ்ஞானத்தை அகற்றி மெய்ஞானம் கொடுத்து பரிபூரண முக்தி நிலையை தரும் தலைவன் என்று அர்த்தமாகும்.
விநாயகர் என்றால் தனக்கு ஒப்பாரும் இல்லை, மிக்காரும் இல்லை என்று பொருள். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லை என்றும் விநாயகருக்கு அர்த்தம் சொல்வார்கள்.

அதுபோல பிள்ளையார் என்றால் தந்தையார் வழியில் வந்த சிறு துகள் என்று அர்த்தமாகும். இப்படி விநாயகருக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அவை அனைத்தையும் தெரிந்து கொண்டு வழிபாடு செய்தால் விநாயகரின் அருளை நிரம்ப பெறமுடியும்.

விநாயகரின் கருணையை பெறுவதற்கு பல வழிகள் உள்ளன. 10 வகையான விரதங்கள் மூலம் விநாயகரை வழிபடலாம். விநாயகருக்கு உகந்த 21 நைவேத்தியங்களை படைத்து வணங்கலாம். விநாயகருக்கு பிடித்த 21 இலைகளை அர்ச்சனை செய்து வழிபட்டால் அவருக்கு இன்னமும் பிடிக்கும்.
விநாயகருக்கு எத்தனையோ வடிவங்கள் உள்ளன. அவற்றில் 32 வடிவங்களை குறிப்பிட்டு சொல்வார்கள். ஆனால் அவரது அனைத்து உருவங்களிலும் பொதுவான சில அம்சங்கள் உண்டு. விநாயகரின் நாபியை பிரம்மா என்றும், முகத்தை விஷ்ணுவின் அம்சம் என்றும், கண்களை சிவனின் அம்சம் என்றும், விநாயகரின் இடதுபாகத்தை சக்தியாகவும், வலதுபாகத்தை சூரிய அம்சமாகவும் சொல்வார்கள். எனவே விநாயகரை வழிபட்டாலே அனைத்து கடவுள்களையும் வழிபட்டதாக அர்த்தமாகும்.

விநாயகரின் உருவத்தில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. அவரது யானை முகம் ஓங்கார தத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்து மதத்தின் மூலவிதை ஓம் என்னும் பிரணவ மந்திரமாகும். அதன் வடிவமாக விநாயகர் முகம் திகழ்கிறது. எனவே விநாயகரை நாம் பார்க்கும் ஒவ்வொரு வினாடியும் நமக்குள் ஓம் என்னும் பிரணவ மந்திரம் ஒலிக்க வேண்டும். அது நமது உடல் உறுப்புகளில் அதிர்வுகளை ஏற்படுத்தி ஆத்ம ஞானத்தை அதிகரிக்க செய்யும்.

இந்த சமயத்தில் நாம் ஒரு மந்திரத்தை சொல்ல வேண்டும். “ஓம் சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம், பிரசன்ன வதனம், த்யாயோத் சர்வ விக்னோப சாந்தயே” என்று சொல்ல வேண்டும். அப்போது சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம், பிரசன்ன வதனம் ஆகிய ஐந்தையும் சொல்லும்போது தலையில் 5 தடவை குட்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விநாயகரை மகிழ்வித்து நாமும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மகிழ முடியும்.

விநாயகரை வழிபடும் போது மூன்று விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 1. விநாயகர் முன்பு தோப்புகரணம் போடுவது. 2. தலையில் குட்டிக்கொள்வது. 3. சிதறு தேங்காய் உடைத்தல். இந்த மூன்றையும் விநாயகர் விரும்புகிறார். எனவே விநாயகர் சன்னதி முன்பு இவற்றை அவசியம் செய்தல் வேண்டும்.

விநாயகருக்கு மிகவும் பிடித்தமானது அருகம்புல். உலகில் முதலில் தோன்றியது அருகம்புல்தான். அதில் இருந்துதான் ஜீவ ஆத்மாக்கள் உருவம் எடுத்தன. எனவே அருகம்புல்லால் நாம் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டால் நமது யோக நிலையில் முன்னேற்றம் தருவார் என்பது ஐதீகம் ஆகும்.
சிலர் மோதகம் தயாரித்து விநாயகருக்கு படைத்து வணங்குவார்கள். இதற்கு என்ன அர்த்தம் என்றால் பக்தி கலந்த வாழ்க்கையே சுவையானது என்பதாகும். எனவே விநாயகருக்கு தொடர்புடைய ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்து, புரிந்து கொண்டு வழிபட வேண்டும்.

விநாயகர் வீற்றிருக்கும் தல விருட்சங்களிலும் சிறப்புகள் உள்ளன. வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமணம் கைகூடும். புன்னை மரத்தடி விநாயகரை வழிபட்டால் கணவன்-மனைவி ஒற்றுமை ஓங்கும். மகிழம் மரத்தடி விநாயகரை வழிபட்டால் இடமாற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். மா மரத்தடி விநாயகரை வழிபட்டால் கோபம் அடங்கும். வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட்டால் மனம்போல் வாழ்வு கிடைக்கும். ஆல மரத்தடி விநாயகரை வழிபட்டால் நோய்கள் தீரும். அரச மரத்தடி விநாயகரை வழிபட்டால் பயிர்கள் விளைச்சல் அதிகமாகும். வில்வ மரத்தடி விநாயகரை வழிபட்டால் பிரிந்த தம்பதிகள் சேருவார்கள்.

அதுபோல விநாயகர் படத்துக்கு சந்தனம், குங்குமம் வைத்து 21 வெள்ளிக்கிழமை விநாயகர் அகவல் படித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று யார் ஒருவர் விநாயகரை மனப்பூர்வமாக வழிபடுகிறார்களோ அவர்களை ராகு, கேது தோஷம் நெருங்காது. இப்படி விநாயகரின் சிறப்புகளையும், வழிபாடு பலன்களையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
Tags:    

Similar News