லைஃப்ஸ்டைல்
மாதவிடாய்

மாதவிடாய் தள்ளிப்போகிறதா? என்ன செய்யலாம்...

Published On 2021-04-13 04:27 GMT   |   Update On 2021-04-13 04:27 GMT
உடலில் பிரச்சனை அல்லது மனதில் அழுத்தம் ஏற்படும் போது மாதவிடாய் தள்ளிப்போதல் அல்லது முன்னதாகவே ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான விஷயம். பொதுவான சுழற்சி 21 நாட்கள் முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை நிகழும் என்று குறிப்பிடப்படுகிறது.

தற்போது பெண்களிடம் ஒழுங்கற்ற மாதவிடாய் வயிற்று வலி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகள் பரவலாக உள்ளன.

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை சமாளிக்க உதவும் முக்கியமான வழி, வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றுவது தான்.

சரிவிகித சத்துள்ள உணவை சாப்பிடுவது, சரியான அளவு நீர் அருந்துவது தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது போன்றவை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகிறது.

மனஅழுத்தம் என்பதும் மாதவிடாய் சுழற்சி சரியான கால இடைவெளியில் ஏற்படாமல் தாமதம் ஆவதற்கு முக்கிய காரணமாகும். கடும் மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

உடலில் பிரச்சனை அல்லது மனதில் அழுத்தம் ஏற்படும் போது மாதவிடாயுடன் தொடர்புடைய ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதனால் மாதவிடாய் தள்ளிப்போதல் அல்லது முன்னதாகவே ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த சிக்கலை சமாளிப்பதற்கு கீழ்க்கண்ட வழிகள் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.

உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய தொடங்கினாலே மனதிற்குள் ஒருவித அமைதி ஏற்படும். தோட்டக்கலை, குரோஷோ, தையல், இசை போன்ற ஏதேனும் ஒரு ஆக்கபூர்வமான கலையில் ஈடுபடுவதும் நல்லது. மாலை நேரங்களில் தியானம், பிரார்த்தனை வழிபாடு போன்ற ஆழ்மனம் தொடர்புடைய விஷயங்களை செய்து வரலாம்.

அன்னாசி உடலின் வெப்பத்தை தூண்டக்கூடிய பழம் என்பதால் மாதவிடாய் தாமத சிக்கல்களை தவிர்க்க உதவுகிறது.

அன்னாசியை போல் பப்பாளியும் உடல் வெப்பதை தூண்டக்கூடிய பழ வகையாகும். இதிலுள்ள கரோட்டீன், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை தூண்டக்கூடியது. அதனால் மாதவிடாய் குறைபாடுகள் அகலும். குறிப்பாக மாதவிடாய் காலங்களில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய முக்கியமான சத்துக்கள் பப்பாளியில் உள்ளன.

மூன்று நாட்களுக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் தண்ணீரில் ஓம விதைகளை ஊறவைத்து குடிப்பதும் மாதவிடாய் தாமத பிரச்சனைகள் தீர வழிவகுக்கும்.

இது கருப்பையை சுற்றி அமைந்துள்ள உடற்பகுதியின் வெப்பத்தை அதிகரிக்க உதவும் என்று சொல்லப்படுகிறது. அதனால் இஞ்சி, தேநீர், இஞ்சிச்சாற்றை தேன் கலந்து பருகுவது போன்றவை சீக்கிரமே மாதவிடாய் வெளிப்பட உதவும்.

வெல்லத்துடன் எள் விதை சேர்த்து இடித்து உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் தாமதங்கள் தவிர்க்கப்படும்.

மேற்கண்ட உணவு வகைகள் மாதவிடாய் சீராக ஏற்படுவதற்கான பொதுவான வழிகள் மட்டுமே. இவை ஒழுங்கற்ற மாதவிடாய் சிக்கலுக்கான தீர்வாகவோ அல்லது சிகிச்சையாகவோ அமையாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Tags:    

Similar News