ஆன்மிகம்
சபரிமலை

நாளை மறுநாள் நடை திறப்பு: சபரிமலையில் மாசி மாத பூஜையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-02-10 05:48 GMT   |   Update On 2021-02-10 05:48 GMT
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள்(12-ந்தேதி) திறக்கப்படுகிறது. தினமும் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் :

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்ட்டிருந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு ஐப்பசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையிலும் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மண்டல பூஜை காலத்தில் முதலில் தினமும் 1000 பக்தர்களுக்கும், பின்னர் 3ஆயிரம் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 5ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன் பதிவு, ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கட்டாயம், சன்னிதானம் மற்றும் பம்பை பகுதியில் தங்கு வதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிக்கப் பட்டன.

இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளைமறுநாள்(12-ந்தேதி) திறக்கப்படுகிறது. 13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை மாதாந்திர பூஜை நடக்கிறது . மாசி மாத பூஜையில் தினமும் 15ஆயிரம் பக்தர்களை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கவேண்டும் என்று கேரள அரசுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு கடிதம் எழுதியது.

ஆனால் தினமும் 15ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க சுகாதாரத் துறை எதிர்ப்பு தெரிவித்தது. பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக நடந்த சுகாதாரத்துறை ஆலோசனை கூட்டத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி, 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை நடை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் சபரி மலையில் மாசி மாத பூஜைக்கு பக்தர்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் தினமும் 15ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற தேவசம்போர்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மகரவிளக்கு பூஜை நாட்களைப்போன்றே, மாசி மாத பூஜையிலும் தினமும் 5ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
Tags:    

Similar News