செய்திகள்
மல்லிகை பூ

சத்தி மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.2,362-க்கு விற்பனை

Published On 2020-10-18 07:40 GMT   |   Update On 2020-10-18 07:40 GMT
சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 362-க்கு விற்பனை ஆனது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான 40 கிராமங்களில் இருந்து 5 டன் பூக்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தார்கள்.

இந்த ஏலத்தில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2,362-க்கும், முல்லைப்பூ ரூ.680-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.46-க்கும், பட்டு பூ ரூ.150-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது. அதேபோல் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,400-க்கும், முல்லை ரூ.480-க்கும், காக்கடா ரூ.550-க்கும், செண்டு மல்லி ரூ.37-க்கும், பட்டுப் பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும் ஏலம் போனது.

நேற்று முன்தினம் நடந்த ஏலத்தை விட நேற்று மல்லிகை பூ ஒரு கிலோவுக்கு 962 ரூபாய் அதிகரித்து விற்பனை ஆனது. அதேபோல் ஒரு கிலோ முல்லை பூ ரூ.200-ம், காக்கடா ரூ.100-ம், பட்டுப்பூ ரூ.70-ம், செண்டுமல்லி ரூ.9-ம் விலை அதிகரித்திருந்தது. மேலும் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.150 விலை குறைந்து ஏலம் போனது.

இதுபற்றி பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, ‘சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு தற்போது பூக்கள் குறைவாக வருகிறது. ஆனால் வியாபாரிகளுக்கு அதிகமாக பூக்கள் தேவைப்படுகிறது. இதனால் வியாபாரிகள் அதிக விலை கூறி பூக்களை வாங்கி செல்வதால் தொடர்ந்து பூக்களின் விலை உயர்ந்து வருகிறது’ என்றனர்.
Tags:    

Similar News