செய்திகள்
கோப்புபடம்

கொரோனா பரவல் உச்சம் - 3 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைகிறது

Published On 2021-04-05 05:19 GMT   |   Update On 2021-04-05 05:19 GMT
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து மராட்டியம் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு மத்திய நிபுணர் குழு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இப்போது மீண்டும் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

நேற்று கடந்த செப்டம்பர் மாதம் இருந்த அளவிற்கு நோய்பரவல் எட்டிவிட்டது. இன்று அதையும் தாண்டி ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேரை கொரோனா தாக்கி உள்ளது.

நிலைமை மோசமாகி வருவதை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் அனைத்து கேபினட் செயலாளர்கள், பிரதமரின் முதன்மை செயலாளர் கொரோனா கட்டுப்பாட்டு குழு நிபுணர்கள் பங்கேற்றனர். அனைத்து மாநில நிலைமைகளையும் உன்னிப்பாக கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா விதிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். 100 சதவீதம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். திருமணம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தேவையான கட்டுப்பாடுகளை கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

மேலும் 5 அம்ச திட்டங்களை அவர் அறிவித்தார். அதன்படி, கொரோனா பரிசோதனைகளை அதிகரிப்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தல். அவர்களுடைய தொடர்புகளை விரைவாக கண்டறிதல். கொரோனா விதிமுறைகளை சரியாக பின்பற்ற செய்தல். தடுப்பூசி போடுதல் ஆகியவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்தார்.

தற்போது மராட்டியம், சத்தீஷ்கர், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு, உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. ஒட்டுமொத்த நோயாளிகளில் 81 சதவீதம் பேர் இங்கு தான் உள்ளனர்.

முதல் 10 மாநிலங்களில் மட்டுமே 91.4 சதவீத நோயாளிகள் உள்ளனர். மொத்த இறப்பில் 90.9 சதவீதம் இந்த மாநிலங்களில் இருக்கிறது.

மாராட்டிய மாநிலம் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 57 சதவீதம் அங்கு தான் உள்ளது. அதேபோல ஒட்டு மொத்த உயிரிழப்பில் 47 சதவீதம் மராட்டியத்தில் நிலவுகிறது.

எனவே மராட்டியத்தில் அதிதீவிர கவனம் செலுத்த பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். இதேபோல பஞ்சாப் மற்றும் சத்தீஷ்கர் மாநிலத்திலும் நோய் பரவல் மிகவேகமாக அதிகரித்து வருகிறது.

மொத்த பாதிப்பில் 4.5 சதவீதம் பேர் பஞ்சாப்பில் உள்ளனர். மொத்த உயிரிழப்பில் 16.3 சதவீதம் பேர் பஞ்சாப்பில் உள்ளது. மற்றொரு மாநிலமான சத்தீஷ்கரில் மொத்தம் உள்ள நோயாளிகளில் 4.3 சதவீதம் பேர் அதிகரிக்கிறார்கள். மொத்த உயிரிழப்பில் 7 சதவீதம் அங்கு உள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் உயிரிழப்பு மிக அதிகமாக உயர்ந்து வருகிறது.

எனவே அந்த மாநிலங்களிலும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதைதொடர்ந்து 3 மாநிலங்களிலும் மத்திய நிபுணர் குழுவை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். தேவைப்பட்டால் அங்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

Tags:    

Similar News