ஆன்மிகம்
சபரிமலை

சபரிமலையில் சரண கோ‌ஷம் முழங்க ஐயப்பனுக்கு இன்று மண்டல பூஜை நடந்தது

Published On 2020-12-26 07:45 GMT   |   Update On 2020-12-26 07:45 GMT
மண்டல பூஜையையொட்டி ஐயப்பனுக்கு இன்றும் தங்க அங்கி அணிவித்து மகாதீபாராதனை நடந்தது. அப்போது சன்னிதானத்தில் திரண்டிருந்த பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்பினர்.
திருவனந்தபுரம் :

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக கடந்த மாAதம் 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா பிரச்சினை காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் கோவிலுக்கு குறைந்த அளவே பக்தர்கள் வந்தனர்.

இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று பிற்பகல் நடக்கிறது. இதற்காக ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி நேற்று சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. அதனை கோவில் தந்திரி மற்றும் மேல் சாந்தி பெற்றுக்கொண்டனர்.

அவர்கள் 18-ம் படியேறி கருவறைக்கு சென்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து இன்று பிற்பகல் 11.40 மணிக்கு மண்டல பூஜைக்கான நிகழ்ச்சிகள் தொடங்கின. இப்பூஜை பிற்பகல் 12.20 வரை நடந்தது.

மண்டல பூஜையையொட்டி ஐயப்பனுக்கு இன்றும் தங்க அங்கி அணிவித்து மகாதீபாராதனை நடந்தது. அப்போது சன்னிதானத்தில் திரண்டிருந்த பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்பினர்.

மண்டல பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பின்னர் ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடக்கிறது. பின்னர் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதன்பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மகர விளக்கு தரிசனம் ஜனவரி 14-ந் தேதி நடக்கிறது.

Tags:    

Similar News