செய்திகள்
காணொலிக்காட்சி வழியாக பிரியங்கா காந்தி பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

விவசாயிகள் மீது காரை மோதும் வீடியோவை வெளியிட்டு பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

Published On 2021-10-06 02:14 GMT   |   Update On 2021-10-06 02:14 GMT
உத்தரபிரதேசத்தில் யாரேனும், அவர்கள் மாணவர்களாக அல்லது ஆசிரியர்களாக இருந்தாலும் போராட்டம் நடத்த முயற்சித்தால், அவர்கள் அடிக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.
லக்னோ :

முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆளுகிற உத்தரபிரதேச மாநிலத்தில், லகீம்பூர் கெரி பகுதியில் கடந்த 10-ந் தேதி அரசு விழா ஒன்றுக்கு, துணை முதல்-மந்திரி கேசவ் மவுரியா, மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அங்கு விவசாயிகள் அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதாக தெரிகிறது.

அப்போது விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் காரைக்கொண்டு மோதியதில் 2 பேர் இறந்தனர். அதைத் தொடர்ந்து வன்முறை மூண்டது. இதில் மொத்தம் 8 பேர் பலியாகினர். விவசாயிகள் மீது காரை மோதியவர், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், பலியானோருக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆறுதல் கூறச்சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, வழியில் சீதாப்பூரில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டார்.

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், போராடிய விவசாயிகள் மீது பா.ஜ.க.வினர் காரை மோதிய பதைபதைக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதையொட்டி பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்விகள் விடுத்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

மோடி அவர்களே, சுதந்திரத்தின் அமிர்த மகோத்சவத்தை கொண்டாடுவதற்கு லக்னோ, வருகிறீர்களே, நீங்கள் இந்த வீடியோவை பார்த்தீர்களா?

இது, உங்கள் அரசில் அங்கம் வகிக்கிற மந்திரியின் மகன், விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றித்தள்ளுவதை காட்டுகிறது. தயவுசெய்து இந்த வீடியோவை பாருங்கள், இந்த மந்திரி இன்னும் ஏன் பதவியை விட்டு நீக்கப்படவில்லை, இந்த பையன் (மந்திரியின் மகன்) ஏன் இன்னும் கைதுசெய்யப்படவில்லை என்பதை நாட்டுக்கு சொல்லுங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



இதே போன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு, ஒரு பதிவையும் செய்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர், “ஒரு மந்திரியின் மகன், போராடிய விவசாயிகள் மீது தனது காரை இடித்து தள்ளுகிறார் என்றால் நாட்டின் அரசியல் சாசனம், ஆபத்தில் உள்ளது. இந்த வீடியோ வெளியான பின்னும் அவர் கைது செய்யப்படவில்லை என்றால், இந்த நாட்டின் அரசியல் சாசனம் ஆபத்தில் உள்ளது. வழக்கு பதிவு செய்யாமல் ஒரு பெண் தலைவர் 30 மணி நேரத்துக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்றால் நாட்டின் அரசியல் சாசனம் ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்” என கூறி உள்ளார்.

இதற்கிடையே பிரியங்கா காந்தி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று காணொலிக்காட்சி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேச மாநிலத்திலும், இந்த நாட்டிலும் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை காட்டும் மிகப்பெரிய படத்தின் பகுதியாகத்தான் இந்த வன்முறையை நான் பார்க்கிறேன். ஏனென்றால், போராட்டங்களுக்கும், மக்கள் தங்கள் குரல்களை உயர்த்துகிறபோதும், அதற்கு இந்த மாநில அரசு வன்முறையின்மூலமும், ஒடுக்குமுறையின் மூலமும் தொடர்ந்து பதில் அளித்து வருகிறது என்பதற்கான தனி ஒரு சம்பவமாக நான் இதைப் பார்க்கவில்லை.

இங்கு தொடர்ந்து நடந்து வருகிற ஒடுக்குமுறையால் எழுந்த ஒரு மிக மோசமான நிலைதான் இது. எனவே உத்தரபிரதேசத்தில் யாரேனும், அவர்கள் மாணவர்களாக அல்லது ஆசிரியர்களாக இருந்தாலும் போராட்டம் நடத்த முயற்சித்தால், அவர்கள் அடிக்கப்படுகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள்.

போராட்டங்கள் மூலமாகவோ அல்லது தங்கள் உரிமைகளை மென்மையாக எழுப்பினாலோ அவர்களுக்கு வன்முறைகள் மூலம்தான் பதில் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News