ஆன்மிகம்
ராமநாத சுவாமி-அம்பாளை தரிசிக்க கிழக்கு கோபுரம் பகுதியில் திரண்டிருந்த பக்தர்கள்.

10 மாதத்துக்கு பிறகு ராமேசுவரம் கோவிலை விட்டு வெளியே வந்த சுவாமி-அம்பாள்

Published On 2021-01-29 03:44 GMT   |   Update On 2021-01-29 03:44 GMT
கொரோனா காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு தைப்பூச தெப்ப திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் ராமேசுவரம் கோவிலை விட்டு வெளியே வந்தனர். திரளான பக்தர்கள் பரவசத்துடன் வரவேற்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நேற்று காலை கருவறையில் உள்ள ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து தங்க ரிஷப வாகனங்களில் பிரியாவிடையுடன் சுவாமி-அம்பாள் எழுந்தருளினார்கள். அதன்பின்னர் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலிலிருந்து சாமி, அம்பாள் புறப்பட்டு கோவிலின் கிழக்கு வாசல் பகுதிக்கு வந்தனர்.

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து 10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் இருந்து முதல் முறையாக நேற்று சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளிப்பதற்காக கோவிலை விட்டு வெளியே வந்ததால் கிழக்கு வாசல் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். ரிஷப வாகனத்தில் வந்த சுவாமியையும், அம்பாளையும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ’ஓம் நமசிவாய’ என்ற பக்தி கோஷம் எழுப்பி வரவேற்று பரவசம் அடைந்தனர்.

அப்போது இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன், மாநில இளைஞரணி செயலாளர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் சுவாமி, அம்பாளுக்கு மாலைகள் சாற்றி, மேளதாளம் முழங்க சிறப்பு வரவேற்பு கொடுத்தனர்.

தொடர்ந்து கோவிலின் கிழக்கு ரத வீதி, தெற்கு, மேற்கு ரத வீதி நடுத்தெரு, திட்டக்குடி, ராமர்தீர்த்தம், சீதா தீர்த்தம் வழியாக பக்தர்களுக்கு காட்சி அளித்த படி பகல் 1 மணி அளவில் லட்சுமணேசுவரர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர். மாலை 6 மணி அளவில் சுவாமி-அம்பாள் தெப்ப உற்சவத்துக்காக சிறப்பு அலங்காரமானார்கள்.

இரவு 7 மணியளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்கள். கோவில் இணை ஆணையர் கல்யாணி ெதப்ப உற்சவத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தெப்பமானது 11 முறை லட்சுமண தீர்த்த குளத்தை வலம் வந்தது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் தக்கார் ராஜாகுமரன்சேதுபதி, கோவிலின் சூப்பிரண்டுகள் ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கலைச்செல்வன், கமலநாதன், கண்ணன், செல்லம் உள்ளிட்ட ராமேசுவரம் தீவு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மீண்டும் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி இரவு 10 மணி அளவில் கோவிலுக்கு வந்தடைந்த பின்னர், பள்ளியறை பூஜை நடைபெற்றது.
Tags:    

Similar News