செய்திகள்

கொடநாடு வீடியோ விவகாரம்- மேத்யூ சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு தடை

Published On 2019-01-29 07:02 GMT   |   Update On 2019-01-29 07:02 GMT
கொடநாடு கொலை, கொள்ளை குறித்து சர்ச்சை வீடியோ வெளியிட்ட மேத்யூ சாமுவேல் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MathewSamuel #MadrasHC #Kodanadissue
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த காவலாளி கொலை, அதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணம் ஆகியவை குறித்து நாரதா நியூஸ் என்ற ஆன்-லைன் செய்தி நிறுவனம், கடந்த 11-ந்தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.

இதையடுத்து அந்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதில், இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ) (மதம், மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் இருபிரிவினரிடையே பகையை, மோதலை ஏற்படுத்துதல்), 505(1), (2) (ஆவணங்களை வெளியிட்டு, அரசுக்கு எதிராக பொதுமக்களை கலவரத்தில் ஈடுபடச் செய்தல்) 120(பி) (கூட்டுச்சதி) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.


இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில், மேத்யூ சாமுவேல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்பதா? வேண்டாமா? என்பது குறித்து தீர்ப்பு அளிப்பதாக கூறி நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த தீர்ப்பை இன்று காலையில் நீதிபதி ஏ.ஆனந்தவெங்கடேஷ் பிறப்பித்தார்.

அதில், ‘தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன். மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கிற்கு ஒரு வாரத்துக்குள் சென்னை போலீஸ் கமி‌ஷனர் பதில் அளிக்க வேண்டும். அதுவரை, மேத்யூ மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கிறேன்’ என்று நீதிபதி கூறியுள்ளார். #MathewSamuel #MadrasHC #Kodanadissue
Tags:    

Similar News