செய்திகள்
பள்ளி மாணவிகள் (கோப்புப்படம்)

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

Published On 2021-01-19 02:41 GMT   |   Update On 2021-01-19 02:41 GMT
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியானது. இதையடுத்து 2020-21-ம் கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்-லைன் வழியாகவும், கல்வி தொலைக்காட்சி மற்றும் யூ-டியூப் மூலமாகவும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்த பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.

தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு செய்தது.

அதன்படி 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கலாமா, வேண்டாமா? என்பது குறித்து கடந்த 6, 7, 8-ந்தேதிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர்கள், பள்ளிகளை திறக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 19-ந்தேதி (இன்று) முதல் பள்ளிக்கூடங்களை திறப்பது என தமிழக அரசு முடிவு எடுத்தது.

அதன்படி இன்று (செவ்வாய்க்கிழமை) 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்கிடையே பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், முன் ஏற்பாடுகள் குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியாகின. அந்த வழிமுறைகளை பின்பற்றும் விதமாக அந்தந்த பள்ளிகள் சார்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கல்வி அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். சென்னை செனாய்நகரில் உள்ள திரு.வி.க. அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல சென்னை மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வின்போது பள்ளி வளாகம் தூய்மையாக உள்ளதா? மாணவர்கள் கல்வி கற்கும் சூழல் இருக்கிறதா? வகுப்பறைகள், கழிவறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா? கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு விஷயங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முதல் 2 நாட்கள் வகுப்புகள் எதுவும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 நாட்களும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வை அச்சமின்றி எழுதுவது தொடர்பான ஆலோசனைகளும், அறிவுரைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

10, 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை குறைப்பது குறித்தும் அரசு பரிசீலனை மேற்கொண்டு, 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு பாடங்களை குறைத்துள்ளது. அதன் விவரங்களையும் சமீபத்தில் கல்வித்துறை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News