லைஃப்ஸ்டைல்
பக்கத்து வீட்டில் இருந்து கிடைக்கும் பாசம்..

பக்கத்து வீட்டில் இருந்து கிடைக்கும் பாசம்..

Published On 2021-01-19 04:24 GMT   |   Update On 2021-01-19 04:24 GMT
பக்கத்து வீட்டினரும் பாசம் காட்டினால்தான் உங்கள் வீட்டில் முழு மகிழ்ச்சி கிடைக்கும். நீங்கள் பக்கத்து வீட்டினருக்கு எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பக்கத்து வீட்டினரும் பாசம் காட்டினால்தான் உங்கள் வீட்டில் முழு மகிழ்ச்சி கிடைக்கும். அதை தவிர்த்து பக்கத்து வீட்டினரிடம் மோதிக்கொண்டே இருந்தால், இருக்கிற நிம்மதியையும் இழக்கவேண்டியதிருக்கும். எதிர்பார்ப்பும், நிபந்தனையும் இல்லாமல் பக்கத்து வீட்டினரிடம் அன்பு செலுத்துங்கள். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால், அவராக வந்து உதவி கேட்டால் மட்டும் செய்தால் போதும் என்று காத்திருக்கவேண்டாம். அவருக்கு பிரச்சினை ஏற்பட்டிருப்பது தெரிந்தால் ஓடிப்போய் முதல் ஆளாக உதவுங்கள். நீங்கள் பக்கத்து வீட்டினருக்கு எதை கொடுக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* பக்கத்து வீட்டுக்காரர் என்னதான் சகஜமாக பழக கூடியவராக இருந்தாலும் அடிக்கடி அவர் வீட்டில் போய் உட்கார்ந்துவிடாதீர்கள். உங்களுக்கு வேலை இல்லாவிட்டால் உங்கள் வீட்டோடு இருங்கள். மற்றவர்கள் வேலையை கெடுக்காதீர்கள்.

* பக்கத்து வீட்டினர் அவர்களது குடும்ப விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே செல்வதை தவிர்த்திடுங்கள். ஆலோசனை என்ற பெயரில் உங்கள் அனுபவங்களை எல்லாம் அள்ளி அவர்களது தலையில் கொட்டிவிடாதீர்கள்.

* ‘நேற்று வீடு பூட்டியிருந்ததே எங்கே போனீர்கள்?’ ‘உங்கள் வீட்டிற்கு நாலைந்து பேர் வந்தார்களே அவர்கள் யார்?’ என்றெல்லாம் கேட்கக்கூடாது. ‘நமது வீட்டை அவர் உளவு பார்ப்பது ஏன்?’ என்ற கேள்வி பக்கத்து வீட்டுக்காரருக்கு வந்துவிடும்.

* பக்கத்து வீட்டில் நடக்கும் சண்டை, சச்சரவு, பிரச்சினைகளை அரசல் புரசலாக கேட்டுவிட்டு அவர்களிடமே போய் அதை பற்றி விசாரிக்காதீர்கள். அவர்களாக கேட்டால் மட்டும் ஆலோசனை கூறுங்கள்.

* பக்கத்து வீட்டு பெண்மணி குண்டாக இருந்தாலும், சிறுமியோ சிறுவனோ குண்டாக இருந்தாலும் அதை சொல்லிக்காட்டவேண்டாம். அவர்கள் குண்டாக இருப்பது, ஏற்கனவே அவர்களுக்கு தெரியும். அதை நீங்களும் போய் சுட்டிக்காட்டவேண்டிய அவசியம் இல்லை.

* குறை இல்லாதவர்கள் யாரும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரரிடமும் குறைகள் இருக்கத்தான் செய்யும். குறைகளை பற்றி பேசாமல், அவர்களது நிறைகளை பற்றி மட்டும் பேசுங்கள். பக்கத்து வீட்டுக்காரரை பற்றி அடுத்த வீட்டுக்காரரிடம் குறை சொல்லா தீர்கள். காலப்போக்கில் அந்த இரு வீட்டாருமே உங்களுக்கு எதிரியாகிவிடுவார்கள்.

* இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பு எல்லை கடந்து போய்க்கொண்டிருக்கிறது. திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்வதும் அதிகரித்து வருகிறது. அப்படி யாராவது உங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தால் அவர்களைப் பற்றி தவறாக பேசிவிடாதீர்கள். அடுத்தவர்கள் அந்தரங்கத்தை பற்றி விவாதிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

* உங்கள் குழந்தைகளிடம் பக்கத்து வீட்டுக்காரர் அன்பு செலுத்துகிறார் என்பதற்காக, அடிக்கடி அவர்களிடம் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிடாதீர்கள். அது நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் தொல்லையாகிவிடும்.

* உங்கள் வீட்டு நாய் அண்டை வீட்டிற்கு சென்று அசுத்தம் செய்துவிட்டால் அதை சுத்தம் செய்யும் பொறுப்பை நீங்கள் தான் ஏற்கவேண்டும். அதைவிட்டுவிட்டு அவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள்.

* பக்கத்து வீட்டுக்காரரின் சுபாவத்தை புரிந்து கொள்ளுங்கள். அவர் அளவோடு பேசுபவர் என்றால் நீங்களும் அந்த அளவை கடைப்பிடியுங்கள். வளவளவென அவரிடம் பேசி அவரை வருத்தப்படவைத்துவிடாதீர்கள்.

* பக்கத்து வீட்டினர் அனைவரும் நல்லவராக இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புவதில் தவறில்லை. அதற்கு முதலில் நீங்கள் நல்லவராக இருக்கவேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். 
Tags:    

Similar News