செய்திகள்
கோப்புப்படம்

மத்திய பிரதேச கவர்னரிடம் அமித்ஷா போல் போனில் பேசிய விமானப்படை அதிகாரி கைது

Published On 2020-01-11 07:25 GMT   |   Update On 2020-01-11 07:25 GMT
மத்திய பிரதேச கவர்னரிடம் அமித்ஷா போல் போனில் பேசி நண்பருக்கு துணைவேந்தர் பதவி வழங்கும் படி கேட்ட விமானப்படை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:

மத்திய பிரதேச மாநில கவர்னர் லால்ஜி டாண்டனிடம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குரலில் போனில் பேசிய நபர், சந்திரரேஷ்குமார் சுக்லா என்பவரை மத்திய பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கும்படி கூறினார்.

இதுகுறித்து மத்திய பிரதேச சிறப்பு போலீஸ் குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அமித்ஷா குரலில் பேசியது விமானப்படை விங் கமாண்டர் குல்தீப் பாகேலா என்பது தெரிய வந்தது.

தற்போது டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் பணியாற்றி வந்த அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் நண்பரான பல் டாக்டர் சந்திரரேஷ்குமார் சுக்லாவும் கைது செய்யப்பட்டார்.

சந்திரரேஷ்குமார் சுக்லா முதலில் தான் அமித்ஷாவின் உதவியாளர் என்று போனில் கவர்னர் மாளிகை அதிகாரியிடம் பேசி உள்ளார். பின்னர் குல்தீப் பாகேலா அமித்ஷா குரலில் பேசி உள்ளார்.

குல்தீப் பாகேலா, மத்திய பிரதேச முன்னாள் கவர்னர் ராம் நரேஷ் யாதவின் உதவியாளர் முகாமில் 3 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளார்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி அசோக் அவஸ்தி கூறியதாவது:-

சந்திரேஷ்குமார் சுக்லா, மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது நண்பர் குல்தீப் பாகேலாவிடம் மூத்த தலைவர் யாராவது தனது பெயரை சிபாரிசு செய்தால் துனை வேந்தர் பதவி கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் மத்திய மந்திரி அமித்ஷா போல் கவர்னரிடம் பேச முடிவு செய்துள்ளனர். இதன்படி அமித்ஷா குரலில் குல்தீப் பாகேலா கவர்னரிடம் பேசி உள்ளார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றார்.
Tags:    

Similar News