செய்திகள்
சரத்பவார்

சரத்பவார் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும்...

Published On 2019-09-26 03:27 GMT   |   Update On 2019-09-26 03:27 GMT
மகராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடுகள் காரணமாக ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சரத்பவார் மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
மும்பை :

மகராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கடந்த 2007-ம் ஆண்டு நடந்த முறைகேடுகள் காரணமாக அரசு கருவூலத்தில் ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அஜித் பவார் உள்பட 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறையினர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் அஜித்பவார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் நெருங்கும் நிலையில் மராட்டிய மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சரத்பவார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அரசியல் கட்சியினர் கருத்து வருமாறு:-

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் கூறுகையில், “இது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கையாகும். தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அவதூறு பரப்புவதையே நோக்கமாக கொண்டு ஆளும் கட்சி செயல்படுகிறது” என்றார்.

காங்கிரஸ் கட்சியும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. இதில், “ஆளும் பா.ஜனதா அரசு எதிர்க்கட்சி தலைவர்களை அடக்க அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது. பா.ஜனதா சர்வாதிகார போக்கை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் சிவசேனா செய்தி தொடர்பாளர் மனிஷா காயந்தே கூறுகையில், “நாட்டின் சாதாரண பொதுமக்கள் தான் கூட்டுறவு வங்கிகளில் பணத்தை செலுத்துகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும். அவர்கள் எந்த கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யே கூறுகையில், ஒரு ஊழல் நடந்திருப்பது உறுதி ஆகி, அதன் மீது வழக்குப்பதிவு செய்திருந்தால், அதுவும் அந்த ஊழல் தொகை ரூ.100 கோடிக்கு மேல் இருந்தால் அமலாக்கத்துறை அந்த வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நெறிமுறை ஆகும். மும்பை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News