செய்திகள்
பொங்கல் பானை விற்பனை

சென்னையில் பொங்கல் பானை விற்பனை களை கட்டியது

Published On 2021-01-13 09:12 GMT   |   Update On 2021-01-13 09:12 GMT
சென்னையில் மண்பானை வியாபாரம் நேற்றும் இன்றும் நன்றாக நடைபெற்று வருவதாக மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் சேம.நாராயணன் கூறினார்.
சென்னை:

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் நுங்கம்பாக்கம், கொசப்பேட்டை, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மண்பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அதை ஆர்வத்துடன் வாங்கி செல்வதையும் பார்க்க முடிந்தது. அதேபோல் பொங்கல் இடுவதற்கு தேவையான விறகு, ஓலை கட்டுகளும் புறநகர் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு வீதிகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.

சென்னையை பொருத்தவரை அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் குடியிருப்புகளின் முன்பு பொங்கல் வைப்பார்கள். இதனால் சென்னையில் பொங்கல் பானை விற்பனைகளை கட்டியது.

மண்பாண்ட விற்பனை தொடர்பாக மாநில மண்பாண்ட தொழிலாளர் சங்க தலைவர் சேம.நாராயணன் கூறியதாவது:-

பாரம்பரிய வழக்கப்படி பொங்கல் தினத்தில் புதுப்பானையில் பொங்கல் வைப்பதை பொதுமக்கள் சம்பிரதாயமாகவே இன்னும் கடைபிடிக்கிறார்கள். தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் நேற்றும் இன்றும் புதுப்பானை, புது அடுப்புகள் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மண்பானை விற்பனை நடக்கிறது.

தமிழகத்தை பொருத்தவரை மண்பாண்ட தொழிலாளர்கள் 4 லட்சத்திற்கும் மேல் இருக்கிறார்கள். வாரியத்தில் மட்டுமே 52 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளார்கள். தினசரி பயன்பாட்டில் மண்பாண்ட பொருட்கள் குறைந்து போனாலும் பாரம்பரியத்தில் மண்பானையில் பொங்கல் இடுவதை பொதுமக்கள் கைவிடவில்லை. சென்னையில் கூட மண்பானை வியாபாரம் நேற்றும் இன்றும் நன்றாக நடக்கிறது.

ஒரு பானையின் விலை சராசரியாக 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உள்ளது. வர்ணம் தீட்டப்பட்ட பானை சுமார் 500 ரூபாய்க்கு விற்கப்படும். வர்ணங்கள் இல்லாத சாதாரண பானை ரூ 100க்கு கிடைக்கும். அதேபோல் மண் அடுப்புகள் ரூ 100, 120 வரை விலைக்கு கிடைக்கும்.

பாரம்பரியத்தை கடைபிடிக்கும் உணர்வு இருக்கும் வரை மண்பானைகள் பயன்பாடும் இருக்கும். பொங்கல் மட்டுமில்லாது உடல் ஆரோக்கிய பிரச்சினைகளால் வீடுகளில் கூட மண்பாண்டங்களில் தண்ணீர் வைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் மண்பானைகளில் கூட நல்லிகள் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

வீடுகள் முன்பு கலர் கோலங்கள் பெரும்பாலும் அனைவரும் நாளை போடுவார்கள். இதனால் சென்னையில் தெருக்களில் வண்ண கோலப்பொடி விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.

புறநகர் பகுதிகளிலிருந்து விறகுகள் பனை ஓலை கட்டுகள் மினி லாரிகளில் கொண்டு வரப்பட்டு பல்வேறு இடங்களில் தெருக்களில் விற்பனை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News