செய்திகள்
நளினி

கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு நளினி மனு

Published On 2019-11-29 01:53 GMT   |   Update On 2019-11-29 01:53 GMT
பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் பரவி உள்ளது.
வேலூர் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நளினி தன்னை விடுதலை செய்யக்கோரி தொடர் உண்ணாவிரதத்தை நேற்று முதல் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று முன்தினம் சிறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார்.

இதற்கிடையே 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாழ்ந்து விட்டதாகவும், பல ஆண்டுகள் விடுதலைக்காக போராடியும் விடுதலை கிடைக்கவில்லை என்பதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் பரவியது.

இந்த தகவலை உறுதிபடுத்திக் கொள்ள சிறைத்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் ஜெயில் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதிகாரிகளிடம் நளினி மனு அளித்துள்ளார். ஆனால் அதில் உள்ள தகவலை தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

கருணைக்கொலை செய்யக்கோரி தான் அவர் மனு அளித்துள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த மனு குறித்து, நளினியின் வக்கீல் புகழேந்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது, இந்த தகவல் எனக்கும் வந்துள்ளது. ஆனால் உண்மையா? என தெரியவில்லை. இதுபற்றி ஜெயில் அதிகாரிகள் தெரிவிக்க மறுக்கின்றனர்.

ஓரிரு நாட்களில் நளினியை சந்திக்க உள்ளேன் என்றார். வக்கீல் புகழேந்தி ஜெயிலுக்கு வந்து நளினியை சந்தித்து பேசிய பின்னர் தான் முழுமையான தகவல் வெளிவரும்.
Tags:    

Similar News