செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

பாஸ்போர்ட்டை பிரேமலதாவுக்கு உடனடியாக திருப்பி கொடுக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-09-01 18:50 GMT   |   Update On 2021-09-01 18:50 GMT
பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை:

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அண்மையில் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். அவருக்கு உடனிருந்து உதவி செய்ய பிரேமலதாவும் துபாய் செல்ல திட்டமிட்டார்.

நெல்லை மாவட்ட போலீசில் 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட குற்றவழக்கை பாஸ்போர்டை புதுபிக்கும் போது மறைத்ததாக கூறி பிரேமலதா பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யுமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவிட்டார். இதன்படி பாஸ்போர்ட் சரண்டர் செய்யப்பட்டது. இதனால், விஜயகாந்துடன் வெளிநாடு செல்ல பிரேமலதாவால் முடியவில்லை.

இதனால், பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை எதிர்த்து பிரேமலதா
, சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.



அப்போது, பிரேமலதா சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, நெல்லையில் தொடரப்பட்ட குற்ற வழக்கு தொடர்பாக கீழ் கோர்ட்டில் இருந்து எந்த ஒரு சம்மனும் வரவில்லை. பிரேமலதா வழக்கு தொடர்பாக எந்த தகவலையும், மறைக்கவில்லை. வெளிநாட்டில் சிகிச்சை பெறும் அவரது கணவருக்கு உடனிருந்து மனுதாரர் உதவ வேண்டியுள்ளது.

எனவே பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்க அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும். பிரேமலதா எங்கும் தப்பி செல்லமாட்டார்’’ என்று வாதிட்டார்.

இவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், ‘‘பிரேமலதாவின் பாஸ்போர்டை உடனடியாக திரும்ப வழங்குமாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார். அதேவேளையில் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவோம், வெளிநாடு சென்று வரும் தேதியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் தெரிவிப்போம், எங்கும் தப்பி ஓட மாட்டோம் என்ற உறுதிமொழியை பாஸ்போர்ட் அதிகாரியிடம் வழங்குமாறு பிரேமலதாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணை 4 வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News