உள்ளூர் செய்திகள்
போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட அ.தி.மு.க.வினரை படத்தில் காணலாம்.

பாளையில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் திடீர் மோதல்- போலீஸ் நிலையம் முற்றுகை

Published On 2022-01-11 07:37 GMT   |   Update On 2022-01-11 07:37 GMT
பாளை கென்னடி தெருவில் உள்ள ரே‌ஷன் கடையில் இன்று இலவச பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. அப்போது கடை ஊழியர்களுக்கு உதவியாக சில தி.மு.க. நிர்வாகிகளும் நின்று பொருட்களை வழங்கி வந்தனர்.
நெல்லை:

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் முழு கரும்புடன் கூடிய 21 இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பாளை கென்னடி தெருவில் உள்ள ரே‌ஷன் கடையில் இன்று இலவச பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. அப்போது கடை ஊழியர்களுக்கு உதவியாக சில தி.மு.க. நிர்வாகிகளும் நின்று பொருட்களை வழங்கி வந்தனர்.

அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.2,500 வழங்கியதாகவும், தற்போது வழங்கவில்லை என பொது மக்களிடம் கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.வினர் ஏற்கனவே கொரோனா நிதியாக தி.மு.க. சார்பில் ரூ.4 ஆயிரம் கொடுக்கப்பட்டு விட்டது என தெரிவித்தனர்.

இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த கணேசன் காயமடைந்ததாக கூறி நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஜெனி, முன்னாள் மண்டல சேர்மன் எம்.சி.ராஜன், நிர்வாகிகள் விவேகானந்தா பாண்டியன், மாரியம்மாள், தானேஷ்வரன், கிளாசிக் பாரத் உள்ளிட்டவர்கள் பாளை போலீஸ் நிலையம் முன்பு முற்றுகையிட்டு தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல் அ.தி.மு.க.வினர் தன்னை தாக்கியதாக கூறி தி.மு.க.வை சேர்ந்த மணி என்பவரும், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரு தரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News