செய்திகள்
கோப்பு படம்

தருமபுரி அருகே மகனை அடித்து கொன்ற தந்தை

Published On 2020-01-13 05:22 GMT   |   Update On 2020-01-13 05:22 GMT
தருமபுரி அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை உருட்டுகட்டையாள் தந்தை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை அடுத்த வே.முத்தம்பட்டி அருகே உள்ள மங்களகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் என்ற சின்னபையன். விவசாயி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 31).

பிரபல ரவுடியான இவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அடி-தடி, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வே.முத்தம்பட்டி பகுதியில் விபச்சார அழகி ஒருவரை கற்பழித்து கொன்ற வழக்கும் இவர் மீது உள்ளது. அதியமான் கோட்டை போலீசாரால் பதிவு செய்யப்பட்ட இந்த கொலை வழக்கில் விபச்சார அழகி யார் என்று இதுவரை அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை.

வழக்கு ஒன்றில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து சேலம் சிறையில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் வெங்கடேசன் வெளியே வந்தார்.

நேற்று மங்களகொட்டாய் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குடிபோதையில் வந்த இவர் தனது தந்தையிடம் மீண்டும் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்தார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு கேட்டு கத்தியால் அவரை குத்த முயன்றார். அப்போது அவரை தடுக்க முயன்ற தம்பி மனைவி காவ்யா (20) என்பவரிடம் தகராறில் ஈடுபட்டார். அவரது கையில் கத்தியால் குத்தினார். இதில் அவரது சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சின்னபையன் உருட்டுக் கட்டையால் தாக்கினார். இதில் வெங்கடேசன் தலையில் அடிபட்டு மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்து போனார். பின்னர் சின்னபையன் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ளது.

கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் ரவுடி பட்டியலில் இடம் பெற்றிருந்தார். வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த இவர் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்து வாழ்க்கை நடத்தி வந்தார். பின்னர் வழிப்பறியில் ஈடுபட்டார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். தொடர்ந்து குடித்துவிட்டு ரகளை செய்ததாலும், வழிப்பறி, மற்றும் அடிதடி வழக்குகளில் ஈடுபட்டதாலும் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் பெங்களூரு சென்று வழிப்பறியில் ஈடுபட்டார். அங்கும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கிருந்து வந்த இவர் தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழிப்பறியில் ஈடுபட்டு சிறை பறவையாக மாறினார். இதனால் குடும்பத்தினரும் இவரை கண்டுகொள்ளவில்லை.

சேலம் சிறையில் இருந்து 30 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த இவர் நேற்று இரவு 10 மணிக்கு தான் ஊருக்கு வந்தார். அதுவும் குடிபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டு தம்பி மனைவியை கத்தியால் குத்தி விட்டு தந்தையை கொல்ல முயன்றதால் ஆத்திரம் அடைந்த தந்தையே இவரை கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News