செய்திகள்
நிபா வைரஸ்

நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலி- தேனி மாவட்ட எல்லையில் சுகாதாரத்துறை தீவிர சோதனை

Published On 2021-09-07 18:28 GMT   |   Update On 2021-09-07 18:28 GMT
நிபா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக தமிழக - கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

கூடலூர்:

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தாலும் கேரளாவில் கட்டுபடுத்த முடியாத நிலையில் உள்ளது. தினசரி பாதிப்பு சராசரியாக 30 ஆயிரத்தை ஒட்டியே உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பில் 60 சதவீதம் கேரளாவில் மட்டுமே பதிவாகி வருவதால் அண்டை மாநில எல்லைகளில் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தமிழக கேரள எல்லையில் உள்ள 9 மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டது. கேரளாவில் இருந்து வருபவர்கள் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

அவ்வாறு இல்லாதவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் நிபா வைரஸ் தாக்குதலால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்தான். இதனையடுத்து தேசிய குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் எல்லைகளில் பரிசோதனையை தீவிரபடுத்தவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர். இதனையடுத்து தேனி மாவட்ட எல்லைகளில் மேலும் கூடுதல் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கிருந்து வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு நோய் அறிகுறி ஏதேனும் தென்படுகிறதா? என சோதனை செய்யப்பட்டது.

ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். 72 மணி நேரத்துக்கு முன்பாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் கேரள எல்லையாக அமைந்துள்ள குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு ஆகிய 3 இடங்களிலும் இது போன்ற சோதனை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News