செய்திகள்
கைது

நடத்தையில் சந்தேகம்- கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற அரசு பள்ளி ஆசிரியை கைது

Published On 2021-02-23 10:22 GMT   |   Update On 2021-02-23 10:22 GMT
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டததால் கூலிப்படையை ஏவி கணவரை கொன்ற அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
உப்பிலியபுரம்:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள பி. மேட்டூர் கங்காணி தெரு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 41). இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி மோகனாம்பாள் (35). இவர் தா. பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த தம்பதியருக்கு சுஜித் (15), ரித்திகா (10) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் ஆன தொடக்க காலத்தில் இருந்தே கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. அடிக்கடி கணவரிடம் கோபித்து கொண்டு மோகனாம்பாள் தனது பெற்றோர் வீட்டிற்கோ அல்லது வாடகை வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சமரசம் ஆகி குழந்தைகளுடன் கணவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் கடந்த 19-ந்தேதி பள்ளிக்குச் சென்ற பழனிவேல் வீடு திரும்பவில்லை. தா.பேட்டை செல்லும் வழியில் உள்ள தேரப்பம்பட்டி வனப்பகுதியில் அவர் மறுநாள் மர்மமான முறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் கண்ணனூர் தா.போட்டை பகுதியில் கிடந்தது.

அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இடது வயிற்றுப் பகுதியில் கத்திக்குத்து காயம் இருந்ததாகக் கூறப்பட்டது. மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்று கொலை செய்தது உறுதியானது. ஆனாலும் ஜம்புநாதபுரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனையில் பழனிவேலை கொலை செய்ததற்கான உறுதியான தடயங்கள் தென்பட்டன.

இதையடுத்து விசாரணை தீவிரமானது. டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை பிடிக்க புலன் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பழனிவேல் மனைவி மோகனாம்பாளுக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப்-இன்ஸ் பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் அதிரடியாக கணவர் வீட்டில் இருந்த மோகனாம்பாளை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். மேலும் கூலிப்படையை சேர்ந்த மூன்று பேரையும் போலீசார் சுற்றிவளைத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி விசாரணை அதிகாரி ஒருவர் கூறும்போது சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட பழனிவேல் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட உள்ளது. விசாரணைக்காக அவரது மனைவி ஞானாம்பாளை அழைத்து வந்திருக்கிறோம். மேற்கொண்டு இன்று மாலைக்குள் அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்படும் என்றார்.

மோகனாம்பாளின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் மனைவியை அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு வாடகை வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் சமீபத்தில் கணவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறி பி.மேட்டூரில் உள்ள கணவர் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்தார்.

இந்த நிலையில் பழனிவேல் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆகவே மோகனாம்பாள் திட்டமிட்டு கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாம் என இன்னொரு விசாரணை அதிகாரி தெரிவித்தார். முழுமையான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் அரசு பள்ளி ஆசிரியை கைதாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News