செய்திகள்
உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே- காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பில் பேசப்பட்டது என்ன?- பரபரப்பு தகவல்கள்

Published On 2019-11-15 02:01 GMT   |   Update On 2019-11-15 02:02 GMT
மாநிலத்தில் புதிய ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் உத்தவ் தாக்கரே- காங்கிரஸ் தலைவர்கள் இடையே என்ன பேசப்பட்டது என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை :

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய அடுத்த நாளே புதிய அரசை அமைப்பது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார். காங்கிரசை சேர்ந்த மாநில தலைவர் பாலசாகேப் தோரட், அந்த கட்சியின் தலைவர்கள் அசோக் சவான், மானிக்கராவ் தாக்கரே ஆகியோருடன் உத்தவ் தாக்கரே பேசினார்.

சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தங்களுக்குள் இணைந்து ஆலோசனை நடத்தி வந்தநிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மட்டும் தனியாக சிவசேனா தலைவரை சந்தித்து பேசியது பல கேள்விகளை எழுப்பியது.

இந்தநிலையில் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர்கள் இடையே நடந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பது குறித்த இறுதி முடிவை எப்போது எடுப்பீர்கள் என்ற கேள்வியை உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர் முன் வைத்து உள்ளார்.



காங்கிரஸ் சார்பில் இந்துத்வா கொள்கை, முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு, வீர சாவர்க்கருக்கு பாரத் ரத்னா விருது போன்ற விவகாரங்களில் சிவசேனாவின் நிலைபாடு குறித்து கேட்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தில் காங்கிரசுக்கும் உரிய பங்கு வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் உத்தவ் தாக்கரேயை கேட்டு கொண்டு உள்ளனர். குறிப்பாக சபாநாயகர் பதவி தேசியவாத காங்கிரசுக்கு சென்றுவிடாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் எந்த நேரத்திலும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளதால் இந்த ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்தது குறிப்பிடத்தக்கது.

தேசியவாத காங்கிரஸ் இல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் உத்தவ் தாக்கரேயை சந்தித்தது அஜித் பவாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், அதனால் தான் அவர் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே நேற்று முன்தினம் மாலை நடைபெற இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனினும் இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் மறுத்து உள்ளது.
Tags:    

Similar News