செய்திகள்
கோப்புபடம்

1-ந்தேதி திறக்கப்படுவதால் பள்ளிகளை தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரம்

Published On 2021-10-28 05:58 GMT   |   Update On 2021-10-28 05:58 GMT
மாணவர்களிடம் முன்கூட்டியே வழிகாட்டு நெறிமுறைகளை பெற்றோர்கள் மூலமாக உணர்த்துவது அவசியம்.
திருப்பூர்:

வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

கொரோனா தொற்று குறைந்த நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் முறையான கொரோனா தடுப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. இதற்காக பள்ளிகளை தயார்ப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

இந்தநிலையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பேசியதாவது:

தொடக்க நிலை மாணவர்களை கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வருவது சிரமமான காரியம். மாணவர்களிடம் முன்கூட்டியே வழிகாட்டு நெறிமுறைகளை பெற்றோர்கள் மூலமாக உணர்த்துவது அவசியம்.

வகுப்பறைகளை எளிதில் அடையாளம் காண, ‘சைன் போர்டு’ குறியீட்டு பலகை மூலமாக குழந்தைகளை வழிநடத்த வேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மையாக வைக்க வேண்டும். கீழ்நிலை தொட்டிகள் பூட்டு போடப்பட்டிருக்க வேண்டும். குடிநீர், மேல்நிலை, கீழ்நிலைதொட்டிகள், கழிவறைகள் தூய்மை செய்த தேதிகளை குறிப்பெடுத்து வைக்கவும். உணவுகளை பகிரக்கூடாது.

இடைவேளை, மதிய உணவு, வீடு திரும்பும் சமயங்களில் உரிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். திருப்பூரில் 1,952 பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வகுப்பறைகள், மாணவர்கள் எண்ணிக்கைகேற்ப சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து கொள்ளலாம்.

பள்ளி திறப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய  வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News