செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்து

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் மாயம்- போலீசில் புகார்

Published On 2021-05-04 09:29 GMT   |   Update On 2021-05-04 09:29 GMT
மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.

மதுரை:

கொரோனாவால் பாதிக்கப்படுகின்ற நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைப்பதில்லை. ஆனால் சமீப காலங்களில் அரசிடம் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி தனியார் ஆஸ்பத்திரிகள் நோயாளிகளுக்கு வழங்கி வருகின்றன.

இதன் காரணமாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இது முக்கியமான மருந்து என்பதால் அதிக விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு பலரும் தள்ளப்பட்டனர். இது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியது.

ரெம்டெசிவிர் மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கின்றனர். இந்த சூழலில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் மாயமாகி இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களுக்கு வழங்குவதற்கான ரெம்டெசிவிர் மற்றும் கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஆஸ்பத்திரியின் கீழ் தளத்தில் உள்ள சேமிப்பு கிட்டங்கியில் வைக்கப்பட்டு உள்ளது.


 

இதில் ரெம்டெசிவிர் மருந்து அடங்கிய 8 பெட்டிகள் மாயமாகி இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது.

மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளியின் உடல்நல சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்தால் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும். இப்படியான சூழலில் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரெம்டெசிவிர் மருந்து எப்படி மாயமானது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

யாராவது அவற்றை திருடி கள்ளச்சந்தையில் விற்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்களா? இதில் மருத்துவமனையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது மர்மமாக உள்ளது.

இது தொடர்பாக மருந்து கிட்டங்கி சூப்பிரண்டு, உதவியாளர்கள், நர்சுகள் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட பலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதவிர மதுரை கொரோனா மருத்துவ மனையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி. டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் மருந்து காலிப் பெட்டிகளில் இடம்பெற்று உள்ள கைரேகைகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News