விளையாட்டு
கோப்பு படம்

ஒமைக்கான் அச்சுறுத்தல் இருந்தாலும் இந்திய அணி திட்டமிட்டபடி தென் ஆப்பிரிக்கா பயணம்?

Published On 2021-12-04 05:50 GMT   |   Update On 2021-12-04 05:50 GMT
இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்வது உறுதி செய்யப்பட்டாலும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கொல்கத்தா:

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடர் முடிந்த நிலையில் தற்போது 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற்று வருகிறது. 7-ந் தேதியுடன் நியூசிலாந்துடனான போட்டி முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டு உள்ளது. வருகிற 9-ந் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு செல்லும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 17-ந் தேதி ஜோகன்ஸ் பெர்க்கில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனால் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா செல்லுமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்கிறது. பி.சி.சி.ஐ.யின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் கங்குலி தலைமையில் கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.

இந்த கூட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து இறுதி முடிவு செய்யப்படும். இதைதவிர மேலும் ஐ.பி.எல். போட்டி, வீரர்கள் ஏலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா பயணத்திற்கு இந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய அணி திட்டமிட்டபடி தென் ஆப்பிரிக்கா செல்கிறது. கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஒருவர் இதை உறுதி செய்தார்.

அதேநேரத்தில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து இந்த தொடரின் போது கூடுதல் கவனம் செலுத்தப்படும். இது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்வது உறுதி செய்யப்பட்டாலும் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வருகிற 17-ந் தேதி தொடங்க இருந்த முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 9 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரகானே நீக்கப்பட்டார். முதல் டெஸ்டில் கேப்டனாக இருந்தஅவர் மோசமான ஆட்டம் காரணமாக கழற்றி விடப்பட்டு உள்ளார்.

அவரது துணை கேப்டன் பதவியும் கேள்விக்குறியாக உள்ளது. தென் ஆப்பிரிக்கா பயணத்தின் போது ரகானேவின் துணை கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது. ரோகித்சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்படுகிறார்.

இதையும் படியுங்கள்... ஒமைக்ரான் வைரஸ் இதுவரை 38 நாடுகளில் பரவியுள்ளது

Tags:    

Similar News