செய்திகள்
கோப்புபடம்

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-02-20 13:41 GMT   |   Update On 2021-02-20 13:41 GMT
போதிய இடவசதியுடன் காய்கறி மார்க்கெட் கட்டித்தரக்கோரி விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு காய்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்:

விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் இயங்கி வந்த மொத்த காய்கறி மார்க்கெட், கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் 2 ஏக்கர் அளவில் புதிய காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

ஆனால் 2 ஏக்கர் அளவில் காய்கறி மார்க்கெட் கட்டினால் இடப் பற்றாக்குறை ஏற்படும் என்றும், எனவே அதே பகுதியில் உள்ள மேலும் 2½ ஏக்கர் இடத்தையும் சேர்த்து 4½ ஏக்கர் பரப்பளவில் காய்கறி மார்க்கெட் கட்டித்தர வேண்டும் என்றும், காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் வி.ஜி.பி. நகர் வழியாக வந்து செல்ல வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளதால், வாகனங்கள் வருவதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை வழியாக வாகனங்கள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகத்திடம் காய்கறி வியாபாரிகள் வலியுறுத்தினர். ஆனால் நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனை கண்டித்து நேற்று காலை விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு விழுப்புரம் நகர அனைத்து காய்கறி வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். தலைவர் தெய்வசிகாமணி, பொருளாளர் ஜோதிராம், துணைத்தலைவர்கள் கலா, குமரன் உள்பட பலர் கலந்துகொண்டு நகராட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினர். உடனே விழுப்புரம் நகர போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காய்கறி வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், விழுப்புரம் நகரில் நிரந்தர காய்கறி மார்க்கெட் கட்டித்தர வேண்டும் என்பது 30 ஆண்டு கால கோரிக்கையாகும். தற்போது புதிய காய்கறி மார்க்கெட்டில் அமைய உள்ள கடைகளின் அளவு போதுமானதாக இல்லை. கனரக வாகனங்கள் வந்து செல்லும் பாதையும் குறுகலாக உள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடமில்லை. எனவே போதிய இடவசதியுடன் விசாலமாக காய்கறி மார்க்கெட் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News