லைஃப்ஸ்டைல்
நீங்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படவேண்டும் என்றால்...

நீங்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படவேண்டும் என்றால்...

Published On 2021-09-11 04:40 GMT   |   Update On 2021-09-11 08:04 GMT
அழகுடன், தன்னம்பிக்கை கலந்தால்தான் அது கம்பீரத்தை தரும். கம்பீர அழகுதான் வயதை புறந்தள்ளிவிட்டு வனப்பைக்கூட்டும். வயதை மீறிய வனப்புடன் நீங்களும் திகழ விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்..
வயதுக்கும், அழகுக்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இல்லை. இளம் பெண்கள் மட்டும்தான் ஜீன்ஸ்- டாப் அணிந்து அழகுடன் வலம் வருவார்கள் என்றும் சொல்வதற்கில்லை. பெண்களால் வயதை மீறிய வனப்புடன் திகழ முடியும். ‘ஏய் இவங்களை பாரு.. எவ்வளவு அழகாக இருக்கிறாங்க..’ என்று, மற்றவர்கள் புகழும் அளவுக்கும் நடந்துகொள்ள முடியும். நிறைய பேர் கூடியிருக்கும் அரங்குகளில்கூட ஒரு சில பெண்கள் மட்டும் மின்னல்போல் பளிச்சென்று காணப்படுவார்கள். பலரது பார்வையும் அவர்களை நோக்கி ஈர்க்கப்படும்.

அப்படி நீங்களும் மற்றவர்களால் ஈர்க்கப்படவேண்டும் என்றால், உங்களுக்கு தன்னம்பிக்கையுடன் கூடிய அழகு தேவை. அழகுடன், தன்னம்பிக்கை கலந்தால்தான் அது கம்பீரத்தை தரும். கம்பீர அழகுதான் வயதை புறந்தள்ளிவிட்டு வனப்பைக்கூட்டும். வயதை மீறிய வனப்புடன் நீங்களும் திகழ விரும்பினால் தொடர்ந்து படியுங்கள்..

புன்னகையும்.. பேச்சும்..

நீங்கள் ஒருவரை முதன்முதலாவதாக சந்திக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவரோடும் உங்களால் இதயபூர்வமாக சிரித்துப்பேச முடியுமா? முடியாவிட்டால் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். முதல் அறிமுகத்திலேயே உங்களால் மற்றவர்களிடம் உணர்வுபூர்வமாக சிரித்துப்பேச முடியவேண்டும். சிரிப்பு என்றதும் உங்கள் உதடுகளும், பற்களும் உங்கள் நினைவுக்கு வரும். உதடுகள் கவர்ச்சியாக இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். பற்கள் வரிசையாக இல்லையே, இடைவெளி இருக்கிறதே என்றெல்லாம், இருக்கிற குறைபாட்டை நினைத்து வருந்தவேண்டியதில்லை. ஏனென்றால் சிரிப்பு பற்களில் இருந்தும்- உதடுகளில் இருந்தும் வருவதில்லை. அது இதயத்தில் இருந்து வரவேண்டியது. இதயத்தில் இருந்து சிரிப்பு வந்தால்தான் அது அறிமுகமாகும் உங்களுக்கும்- அவருக்கும் இடையே ஒரு நட்பு பாலத்தை பலமாக அமைக்கும்.

உங்களிடம் எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை மற்றவர்கள் நீங்கள் பேசும் போது தான் தெரிந்துகொள்கிறார்கள். அதனால் உங்களை நீங்களே நன்றாக வெளிப்படுத்த, உங்களது பேச்சு ஸ்டைலை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். நீங்கள் பேசவிரும்பும் கருத்தை சுவாரஸ்யப்படுத்தி, தமாஷாக சொல்வது நல்லது. ஆனால் வேண்டுமென்றே தமாஷை புகுத்தினால், உங்கள் கருத்து வலுவிழந்து, பேச்சு மற்றவர்களை ஈர்க்காமல்போய்விடும். கிராமிய மணம் கமழும் வார்த்தைகளை பிரயோகிப்பது நல்லதுதான். ஆனால் அலுவலகரீதியான அபீஷியல் மீட்டிங்குகளில் கிராமிய வார்த்தைகளை தவிர்ப்பதுதான் நல்லது.

முன்னால் இருப்பவரின் கண்களை பார்த்து நேருக்கு நேர் பேசவேண்டும். பார்வையை அங்கும் இங்கும் அசைக்காமல் பேசினால்தான் அந்த கருத்து கவனிக்கத்தக்கதாக இருக்கும். பேசும்போது கண்கள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்துகொண்டிருந்தால் கருத்து வலுவிழக்கும். பொய் சொல்வதாகக்கூட கருதிவிட வாய்ப்பிருக்கிறது. பேசிக்கொண்டிருக்கும்போது உங்கள் கைகளை இறுக்கமாக பற்றிப் பிடித்துக்கொண்டிருப்பது, கைகளை பிசைந்துகொண்டிருப்பது, கால்களை அங்கும் இங்குமாக ஆட்டிக்கொண்டிருப்பது போன்றவைகள் தவிர்க்கப்படவேண்டும்.

உட்காரும் விதம்

பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் நீங்கள் உட்காரும் விதத்திலும் தன்னம்பிக்கை பளிச்சிடவேண்டும். முதுகை நிமிர்த்தி நேராக உட்காரவேண்டியது அவசியம். முதுகை வளைத்துக்கொண்டு, தோள்களை மடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் கம்பீரம் இருக்காது என்பது மட்டுமின்றி, உங்களை அதிக வயதுகொண்டவராகவும் காட்டிவிடும். தோள்களை இயல்பாக வைத்துக்கொள்ளவேண்டும். அளவுக்கு மீறி தோள்கள் நிமிரும்படி உட்காருவதும் சரியானதல்ல. உட்கார்ந்துகொண்டு அங்கும் இங்குமாக பார்ப்பதும், திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டிருப்பதும் சரியான அணுகுமுறையல்ல. முன்பு பெண்கள் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டிருப்பது கர்வத்திற்குரியதாக கருதப்பட்டது. இப்போது அதுவே தன்னம்பிக்கையின் அடையாளமாக சொல்லப்படுகிறது. அதனால் சூழலுக்குதக்கபடி உங்களுக்கு பிடித்தமான முறையை கடைப்பிடியுங்கள்.

நிற்பதும், நடப்பதும்

பெண்கள் நிற்கும்போது இரண்டு கால்களுக்கும் சமமான அழுத்தம்கொடுத்து நிற்கவேண்டும். கைகளை கட்டிக்கொண்டு நிற்பது எல்லைமீறிய பணிவாக கருதப்படுகிறது. சிலருக்கு கைகளை கட்டிக்கொண்டு நிற்பது புதிய கம்பீரத்தை தரும். கிடைத்த இடத்தில் சாய்ந்து கொண்டு நிற்பதும், எதையாவது பிடித்துக்கொண்டு நிற்பதும், நீங்கள் மனதளவிலோ உடல் அளவிலோ சோர்ந்து போயிருப்பதை காட்டிக்கொடுத்துவிடும். கால்களை பலமாக ஊன்றி, கைகளை இயல்பாக வைத்துக்கொண்டு நிற்பதே, தன்னம்பிக்கையுடையதாக இருக்கும்.

உங்கள் நடை மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கவேண்டும். அதற்காக கண்ணாடி முன்பு நின்று நடந்து பார்த்து, உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற நடையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஹைஹீல்ஸ் செருப்பு அணிகிறவர்கள், முதலில் வீட்டில் கண்ணாடி முன்பு அதை அணிந்து நடந்து பார்த்துவிட்டு, பொது இடங்களுக்கு அதனை அணிந்துசெல்லுங்கள். தட்டையான செருப்பு அணிந்து நடக்கும்போது சிலருக்கு கம்பீரம் கிடைக்காது. அப்படிப்பட்டவர்கள் ஹைஹீல்ஸ் அணிந்து கம்பீரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.

உடையில் அழகு

பேஷனுக்கு தகுந்தபடி பெண்கள் உடைகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் பேஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா? உங்கள் உடல் அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமா? என்பது குறிப்பிடத்தக்கது. பேஷனுக்குள் உங்கள் உடலைகொண்டுபோய் திணிக்கக் கூடாது. உங்கள் உடலுக்கு பொருத்தமான பேஷனை தேர்ந்தெடுங்கள். இடுப்பு, கை கால், முதுகு அழகை எடுத்துக்காட்டும் விதத்தில் ஆடைகளை அணிய இப்போது பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். அலுவலகத்திற்கு கிட்டத்தட்ட எல்லா பெண்களுமே ‘பார்மல்’ உடைகளை அணியத்தான் ஆசைப்படுகிறார்கள். ஜீன்ஸ் இப்போது கேஷூவல் உடையாகிவிட்டதால் பயணம் செய்யும்போதும், ஷாப்பிங் செல்லும்போதும் அதை அணிந்து செல்கிறார்கள். அது இப்போது பெண்களின் சவுகரிய உடையாகிவிட்டது.

புடவை எப்போதுமே பெண்களுக்கு அழகுதான். அதை நேர்த்தியாக பிளீட்ஸ் எடுத்து ‘பின்’ செய்து அணியவேண்டும். ஜரிகை கொண்ட உடைகளை அலுவலகத்திற்கு அணிந்து செல்வதை தவிர்க்கவேண்டும். பூக்கள் மற்றும் பெரிய பிரிண்டுகள் கொண்ட உடைகள் பார்க்க அழகு தரும். பீச், சுற்றுலா பயணங்களின்போது அதனை உடுத்திக்கொள்ளலாம். உடல் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு பெரும்பாலும் எல்லாவிதமான நிற உடைகளும் பொருந்தும். குண்டாக இருப்பவர்கள் கறுப்பு நிற உடைகளில் கவனம் செலுத்தவேண்டும். மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் தொளதொளப்பான உடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும்.
Tags:    

Similar News