செய்திகள்
கோப்புபடம்

சீர்காழி, பொறையாறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-06-09 15:05 GMT   |   Update On 2021-06-09 15:05 GMT
சீர்காழி மற்றும் பொறையாறு பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய துணை செயலாளர் நீதிசோழன், விவசாய சங்க செயலாளர் வரதராஜன், மாதர் சங்க செயலாளர் தேவகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் மன்ற செயலாளர் பிரபாகரன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்களுக்கு தேவையான தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு உடனடியாக தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி நிறுவனத்தை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழக அரசிடம் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை பல்லாயிரம் கோடியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரியை குறைத்து பெட்ரோல் ரூ.50-க்கும், டீசல் ரூ.40-க்கும் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்களின் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் இளமதியம், மாவட்ட நிர்வாகி ராமன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயக்குமார், பாஸ்கரன், வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல பொறையாறு கடைத்தெருவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர், வேதநாயகம் தலைமை தாங்கினார். மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பகத்சிங் கண்டன உரையாற்றினார். அதனை தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் தரங்கம்பாடி பேரூர் செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதேபோல செம்பனார்கோவில் கடைத்தெருவில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும் செங்கல்பட்டு மருந்து ஆலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News