செய்திகள்
மாநிலங்களவை

கொரோனா அச்சுறுத்தல்- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைய வாய்ப்பு

Published On 2020-09-23 03:10 GMT   |   Update On 2020-09-23 03:10 GMT
எம்.பி.க்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரவிய நிலையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. இரு சபைகளும் தினமும் 4 மணி நேரம் கூடுகின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறை இன்றி சபைகள் இயங்குகின்றன. உறுப்பினர்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்க வசதியாக, இரு அவைகளும் ஒங்கிணைக்கப்பட்டன. 

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பாராளுமன்ற அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் தினந்தோறும் துரித ஆன்டிஜன் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 25-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, பிரகலாத் படேல் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருந்த நிலையில் பாதிப்புக்கு ஆளானார்கள். 16-ந் தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. பல்லி துர்காபிரசாத் ராவ் (திருப்பதி தொகுதி), கொரோனாவால் சென்னை ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார்.

இந்த சூழ்நிலையில் தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடக்கூடும் என்ற அச்சம், எம்.பி.க்கள் மத்தியில் பரவலாக காணப்படுவதாக தெரிகிறது. எனவே அக்டோபர் 1-ந் தேதி முடிய உள்ள நிலையில் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு திட்டமிட்டள்ளது. 

பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய ஆலோசனையின்போது,  மழைக்கால கூட்டத்தொடரை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்றுடன் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வேளாண் சட்ட மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், கூட்டத்தொடரை ஒத்திவைப்பதற்கு முன்பாக நிலுவையில் உள்ள முக்கிய சட்ட மசோதாக்கள் இன்று நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News