செய்திகள்
கோப்புப்படம்

மதுரையில் எல்.ஐ.சி. அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை

Published On 2020-09-15 01:03 GMT   |   Update On 2020-09-15 01:03 GMT
மதுரையில் எல்.ஐ.சி. அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.
மதுரை:

மதுரையில் கடந்த சில நாட்களாக திருட்டு, வழிப்பறி சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பழனிக்குமார் தலைமையில் குற்றச்சம்பவங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நகரில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். அதன் காரணமாக அவனியாபுரம், எஸ்.எஸ்.காலனி, செல்லூர் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு சிலரை கைது செய்து, அவர்களிடமிருந்து 13 மோட்டார் சைக்கிள், நகைகளை பறிமுதல் செய்தனர்.

ஆனால் புறநகரை ஒட்டியுள்ள நகர் பகுதியில் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து தான் வருகிறது. இதனை தடுக்கவும் போலீசார் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். மதுரை ஆனையூர், சஞ்சீவி நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணராஜா(வயது 57). எல்.ஐ.சி.யில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு கூடல்நகரில் உள்ள சகோதரி வீட்டிற்கு சென்று விட்டார்.

மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அதில் சம்பவத்தன்று இரவு மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் முத்துகிருஷ்ணராஜாவின் சகோதரி குடும்பத்தினருடன் வெளியூர் சென்றதால், அவரது வீட்டை பாதுகாப்பதற்காக இவர் அங்கு சென்றுள்ளார். வீடு பூட்டியிருப்பதை கண்டதும் மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். மேலும் கேமராவில் பதிவான நபரின் அடையாளத்தை வைத்து பார்க்கும் போது, பழைய குற்றவாளி ஒருவரின் உருவத்துடன் ஒத்து போகிறது. எனவே போலீசார் அந்த நபரை பிடிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Tags:    

Similar News