லைஃப்ஸ்டைல்
நந்திதா அருண்

கருப்பு பூஞ்சை நோய் பரவுது... நீரிழிவு நோயாளிகளே கவனமா இருங்க..

Published On 2021-05-24 08:55 GMT   |   Update On 2021-05-24 08:55 GMT
நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனாவை நினைத்து பயப்படுவதா? இல்லை கருப்பு பூஞ்சை நோயை நினைத்து பயப்படுவதா? என்று தெரியவில்லை. கிண்டியில் உள்ள டாக்டர் ஏ.ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் நந்திதா அருண் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏன் கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

கருப்பு பூஞ்சை என்பது ஒரு பூஞ்சை. இது எப்போதும் காற்றில் இருப்பது தான். ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறையும் போது இந்த பூஞ்சை மூச்சு வழியாக உடலில் ஏறி அதிக பிரச்சனை ஏற்படுகிறது. உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்  இந்த நோய் அதிகளவில் பரவி உள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து இந்த நோய் பரவலாம். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படும் போது அதனால் நுரையீரலில்
 பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு ஸ்டிராய்டு மருந்து கொடுத்தால் மட்டுமே அவர்களை காப்பாற்றும் நிலை உள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்டிராய்டு மருந்து அதிகமாக கொடுக்கும் போது சர்க்கரையின் அளவும் அதிகரித்து இதன் காரணமாக கருப்பு பூஞ்சை நோய் பரவுகிறது.
 அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று காரணமாக நுரையீரல் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு டியூப் மூலமாக வெண்டிலேட்டர் வழியாக ஆக்சிஜன் செலுத்தும் போதும் இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கலாம்.

இந்த நோய் குறித்து பயப்படுவதற்கு முக்கிய காரணம் இந்த நோய் மூக்கு வழியாக முன்னேறி கண்களுக்கு பரவி கண் பார்வை பறிபோகவும் அதிக வாய்ப்புள்ளது. மேலும் மூளையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.

மருத்துவர்கள் அந்த நோயை முன்கூட்டியே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே எந்த பிரச்சனையும், உயிரிழப்பும் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.

மேலும் இந்த நோயை கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஆரோக்கிமான சத்தான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே எந்த பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும் என்றார்.

வெளியில் செல்வதாக இருந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொண்டு செல்வது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் இந்த நோய் வராமல் தடுக்கவும் முடியும் என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News