உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதி- அமைச்சர் அறிவிப்பு

Published On 2021-12-04 04:38 GMT   |   Update On 2021-12-04 07:10 GMT
ஒமைக்ரான் உலக அளவில் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை.

புதுச்சேரி:

புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 2 ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன.

கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.

நவம்பர் மாதம் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகளை திறக்க முடிவு எடுத்தோம். மழை காரணமாக திறக்க முடியவில்லை.

தற்போது நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. ½ நாள் மட்டுமே பள்ளிகள் இயங்கும்.

 


ஏற்கனவே திறக்கப்பட்டு நடந்து வரும் 9 முதல் 12-ம் வகுப்பு மற்றும் கல்லூரிகள் நாளை மறுநாள் முதல் முழு நேரமாக செயல்படும். அனைத்து பள்ளி வகுப்புகளும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் நடைபெறும்.

வருகிற 6-ந்தேதியில் இருந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மதிய உணவு வழங்கப்படும். 1 முதல் 8-ம் வகுப்பு வரை முழு நேரம் பள்ளிகள் செயல்பட்ட பிறகு மதிய உணவு வழங்கப்படும்.

ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். தடுப்பூசி போட்டால் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்க உள்ளோம்.

பெற்றோர்கள் கண்டிப்பாக பள்ளிகளை திறக்க வேண்டும் என கோரினர். ஆன்லைன் வகுப்புகளில் கவனிப்பது சிரமமாக இருந்ததாக வலியுறுத்தினர். அதனால் பள்ளிகளை திறக்கிறோம். பள்ளிகளில் நேரடி வகுப்புடன் ஆன்லைன் வகுப்பும் தொடரும்.

ஒமைக்ரான் உலக அளவில் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. எனவே புதுவை மக்கள் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... புதுச்சேரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு- சிகிச்சைக்கு 100 படுக்கைகள் தயார்

Tags:    

Similar News